பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






நவம்பர் 21


இறைவா, குறிக்கோளினை நோக்கி என் வாழ்க்கையை இயக்குக!

இறைவா, ஞாலமாய் இவை வந்து போம் காலமாய் நின்றருள்பவனே! நின் சோதனைகளை ஏழையாகிய என்னால் தாங்க இயலவில்லை. பெற்ற தாயின் அன்பு எவ்வளவு உயர்ந்தது. அதனை நுகர்ந்தே மகிழ்ந்து வாழ்ந்து சாகலாம் என்றால், இடையில் தட்டிப்பறித்து விடுகிறாய். இது என்ன சோதனை!

இறைவா உனக்குக் கல்நெஞ்சமா? ஏன் உன்னையே காண்கிறேன். பேசி மகிழ்கிறேன்! உடனே ஓடி ஒளிந்து விடுகிறாய். ஏன் இந்தச் சோதனை இறைவா? இறைவா நன்றருளிச் செய்தனை! இந்த உலகின் அமைப்புகள் அனைத்தும் கடமைகளின் வழிப்பட்ட அமைப்பு. கடமைகளின் வழி மாறி மாறிச் சுழலும்.

ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளைச் செய்யும் பொறுப்பேற்க வேண்டும். சார்பு இருந்தால் பொறுப்பு வராது. அதனால் பொறுப்பேற்கும் பருவத்தில் காலத்தில் பிரிகின்றாயே! அப்படியா இறைவா!

நல்லவர்களுக்குப் பிரிவு அன்பை வளர்க்கும், கடமை உணர்வைத் தூண்டும். இறைவா, உன்பால் என்னுடைய அன்பு நிரந்தரமாக ஊற்றெடுக்கப் பிரித்தருள் செய்கிறாய்!

நானே என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பேற்க என் தாயைப் பிரிந்தாய்! இறைவா, படைப்பியக்கத்தின் நுட்பம் புரிகிறது. மரணங்களின் உண்மை புலனாயிற்று.

நான் செத்தவர்களுக்காக அழமாட்டேன். அவர்கள் எதற்காகச் செத்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவேன். வாழ்க்கை குறிக்கோளுடையது.

இறைவா, குறிக்கோளினை நோக்கி என் வாழ்க்கையை இயக்குக!