பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





நவம்பர் 29


என் மனோசக்தி தொழிற்பட அருள்செய்க!

இறைவா, நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவனே! போற்றி! போற்றி! இறைவா, நான் யார்? என் உயிர் எது? இறைவா, என் உயிர், உடல் முழுதும் பரவி நீக்கமற நிறைந்து நிற்கிறது.

இறைவா, என் உச்சந்தலையில் உள்ள உரோமத்திலிருந்து கால் நுனியில் உள்ள நகம் வரையில் எங்கணும் என் உயிர் இருக்கிறது! ஆயினும் உயிரின் இயக்கம் மனத்தினாலேயாம்.

"மனமுண்டேல் வழியுண்டு” என்பதன் தத்துவப் பொருள் விளக்கம் என்ன? மனமிருந்தால் அறிவும் இயங்கும். இறைவா, என் மனத்தை மீட்டுத்தா!

இறைவா, என் மனத்தில் நீ எழுந்தருளியிருந்து கொண்டு என் மனத்தைப் புறம் போகவிடாமல் எனக்குத் துணையாக இருக்கும்படி அருள் செய்க. என் மனம் என்வசம் இருக்கும்படி அருள் செய்க! என் மனம் அட்டமாசித்தியும் இயற்றிடும் ஆற்றலைப் பெற்று விளங்க வேண்டும்!

இறைவா, மனம் போல வாழ்வு! என் வாழ்வும் மனமும் இசைந்தவை. நான் வாழ்ந்திட, வாழ்வாங்கு வாழ்ந்திட அருள் செய்க! மனமது செம்மையாகிப் புது வாழ்வு பெற்றிட அருள் செய்க! என்மனம்! ஆம், அதிசக்தி வாழ்ந்தது. என் மனோசக்தி தொழில்பட அருள் செய்க!