பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1860

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஊடலும் உணவுக்கு உப்புப் போலச் சுவைமிகுந்து வழங்குவதே என்றனர். ஆதலால் காதல் வாழ்க்கையைச் சிற்றின்பம் என்று சீரழித்துச் சித்திரவதை செய்வது நன்மரபாகாது. காதல் வாழ்க்கையினால் மானிடன் பெறும் ஆற்றலைப் பாரதி,

“காற்றில் ஏறி, அவ்
விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள்
கடைக்கண் பணியிலே!”

(பெண்கள் வாழ்க—8)

என்று பாடுகின்றான். சித்தாந்தச் செந்நெறியும் கூடச் சிவமாகிய பரம்பொருள் சக்தியாகிய அம்மையுடன் சேரும்பொழுதே ஆற்றல்பெற்று ஐந்தொழில் நிகழ்த்துவதாகக் கூறுகிறது. ஏன் சிவம் அடியார்களுக்கு அருளியபோதெல்லாம் அம்மை உடனிருந்து, அருளுதற்குத் துணையாயமைந்ததால் என்பது பெரிய புராணத்தின் விளக்கம்; முடிவு. ஆதலால், மனையறத்தில் நிகழும் காதல், இறைநெறிக்கு முரணாவது இல்லை. இந்த அன்பு தூய்மையானது. காதலர்கள் முழுமையாக வளர்ந்து நன்மக்கட் பேற்றின் மூலம் வையகத்திற்கு-அன்பில் பழுத்து வளர்த்த புகழுடைய வர்களாதலால்-வானோர்க்கும் விருந்தாக அமைகின்றனர்.

துறவு வாழ்க்கையைவிட மனையற வாழ்க்கை எளிதன்று. துறவிகள் கூடக் களத்திலிருந்து விலகிப் பொறிகளை ஒடுக்கிப் பழக்கப்படுத்துதல் மூலம் எளிதில் வெற்றி பெறலாம். ஆனால் மனையறத்தில் இன்பக் களத்திலிருந்து விலகுதல் இல்லை. அங்கேயே இருந்து துய்ப்பதையே இலட்சியமாகக் கொள்ளமால் துய்ப்பிப்பதை இலட்சியமாகக் கொண்டு வாழ்தலுக்கு மிகக் கடுமையான துறவு மனப்பான்மையும் நியாய உணர்வும் தேவை. சுவையாகச் சமைத்தல் வேண்டும். ஆனால் சுவைத்து