பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்து கொள்ளும் சுதந்திரம் தேவை. எந்தக் காரணத்தை முன்னிட்டும் மக்களிடத்தில் பயம் இருத்தல் கூடாது. பயமில்லாமல் சுதந்திரமாக உழைப்பைப் பயன்படுத்திப் பணியாற்ற வேண்டும். உழைப்பின் பயனை மக்கள் அடைய வேண்டும்; “வாழ்க்கையின் தேவைகளை அடையத்தக்க சுதந்திரமான உழைப்போர் தேவையே” என்றார் போப் பால்.

மானுடத்தின் சென்ற கால வரலாறுகள் ஊக்க மளிப்பனவாயில்லை. போர்கள் நிறைந்த ஆண்டுகளே மிகுதி. மானுடத்தின் நீண்டகால வரலாற்றில் போர் இல்லாத காலம் 292 ஆண்டுகள்தான் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். கடந்த காலத்தில் இந்த உலகம் பதினையாயிரத் துக்கும் அதிகமான போர்களைச் சந்தித்துள்ளது. 140 இலட்சம் உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன.

இன்றைய நிலை என்ன? இன்று வாழும் பலர் இன்றைய எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களாக, சென்று போன காலங்களின் கருத்துக்களிலேயே, பழைமையின் பிடிப்புக்களிலேயே வாழ்கின்றனர். இவர்கள் பானையில் தலையை விட்டுக் கொண்டு தலையை எடுக்க முடியாமல் தவிப்பதைப் போல வாழ்கின்றனர். பைத்தியக்காரர்களே போரினை, விரும்புகிறவர்கள்! எந்த வகையான தருக்கவியலும் போரினை வரவேற்கவில்லை. மாறாக, போரை மறுதலித்தே வந்துள்ளன.

இந்த உலகில் பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர்; பல மதங்கள் நிலவுகின்றன! இந்தப் பரந்துபட்ட மக்களிடையே நட்புறவும் நல்லிணக்கமும் தேவை. மதங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கே உரியன. மதங்கள் அரசியல், பொருளாதார வாழ்க்கையில் ஊடுருவ அனுமதிப்பது விரும்பத் தக்கதுமல்ல அனுமதிப்பதற்கும் இல்லை. மானுடத்தின் வரலாற்றில் நடந்த பல போர்கள் மதங்கள்