உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


70. இலட்சிய நடை!

இனிய நண்ப,
ஏன் தயங்கி நிற்கிறாய்?
களைப்பா? சோர்வா? பயமா?
அல்லது,
உன் கட்டுக்குள் திரிந்த சுயநலம்
வெளிப்பட்டு உன்னை ஆட்சி செய்கிறதா?
அல்லது
தீமையின் தீமையாகிய - பணியினிடையில்
மனநிறைவு வந்துவிட்டதா?
ஏன் நிற்கிறாய்? ஐயோ, பாவம்!
சாலை வழிப்பயணம் மேற்கொள்ளும்போது
நாய்களைச் சந்திப்போம்!
குரைக்கும் நாய்களைச் சந்திப்போம்!
ஆனால், நாய்களுக்குப் பின்னால் செல்வோமா?
நாய்கள் பின்னே சென்றால் நாய்களைப் பிடிக்கலாம்.
ஆனால், சென்றடைய வேண்டிய ஊருக்குப் போகமுடியாது.
அதுபோலத்தான்
நம்மை விமர்சிப்பவர்கள் புழுதி வாரித் துரற்றுபவர்கள்!
அவர்களைக் கண்டு அஞ்சினால்...
அவர்கள் பாடு அவர்களுக்கு!
நமது குறிக்கோள் திசையில்
நாம் சோர்விலாது நடந்திட வேண்டாமா?
இலக்கை அடையும் வரையில்
இடையீடின்றி நடக்க வேண்டும்! வா, வா!
எதுவும் மந்திரத்தில் நடக்காது
செயலே இலக்கை அடையும் வழி !
ஒரு மனத்துடன் கடமைப் பிடிப்புடையவர்காள்
வருக, வருக! செயலே செய்க!