பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

101


தாகத் தெரியவில்லை. நமக்கும் தரும புரத்தில் குட்டித் தம்பிரான்கள் ஓரிருவரிடம் உறவு நல்லவண்ணம் அமையவில்லை. ஏனோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

காவிரிக் கரையில் நாம் சொன்ன 'குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்' என்ற வார்த்தைகளுக்குக் கண், மூக்கு, காது வைத்து திருமடத்தின் மரபை மீறி பேசியதாக மகாசந்நிதானம் அவர்களிடம் 'கோள்' சொல்லிவிட்டார்கள்.

காலையில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு அறைக்கு வந்து, கடையிலிருந்து வந்த இட்லிப் பொட்டலத்தை அவிழ்த்துச் சாப்பிட உட்கார்ந்தோம்.

மகாசந்நிதானத்திடமிருந்து அழைப்பு வந்தது. உடன் விரைந்து சென்றோம், மகாசந்நிதானம் உள்ள அஷ்டலட்சுமி கட்டிற்குச் செல்லும்போதே, மகாசந்நிதானம் அவர்கள் திருவுள்ளத்தில் ஏதோ ஆதங்கம் ஏற்பட்டிருப்பதைச் செவிப் புலன் வழியாக உணர முடிந்தது.

அஷ்டலட்சுமி கட்டின் வாசற்படியில் ஆதீன உயர் அலுவலர் தேசிகர் நம்மை நிறுத்தினார். விசாரிக்கத் தொடங்கினார். மகாசந்நிதானம் அவர்களிடம் நேரில் விண்ணப்பித்துக் கொள்வதாக உயர் அலுவலரை ஒதுக்கி விட்டுச் சென்றோம். மகாசந்நிதானம் அவர்களின் திருவுள்ளம் சாதகமாக இல்லை என்பதை உணர முடிந்தது. நிலத்தில் வீழ்ந்து வணங்கி, "யானறிந்து எந்த ஒரு பிழையும் செய்யவில்லை... பிழை பொறுத்தருளல் வேண்டும்” என்று விண்ணப்பித்துவிட்டு, விடைக்குக் காத்திராமல் அறைக்கு வந்து விட்டோம், அன்று மதியம், அறை. மாற்றல் ஆணை கிடைத்தது. 'வாழைக்காயைக் கனிய வைக்கும்' அறை கிடைத்தது. பார்த்து வந்த பணிகளும் பணிவிடைப் பணிகள் உட்படப் பறிக்கப்பெற்றன. நம்முடன் யாரும் பேசக்கூடாது என்ற