பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


‘வீழ்க... ஒழிக' என்ற கோஷங்கள் இல்லை. ஊர்வலம் குன்றக்குடித் திருக்கோயில் முகப்பில் உள்ள தகரக்கொட்டகைக்கு வந்து சேர்ந்தது. நம் தலைமையில் கூட்டம்! "இந்தியாவின் அலுவல் மொழிகளாக இந்திய தேசிய மொழிகள் அனைத்தையும் ஆக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறை வேற்றப் பெற்றது. நாம் “எல்லோரும் அமைதியாக வீடுகளுக்குச் சென்று படிக்க வேண்டும்” என்று மாணவர்களைக் கேட்டுக்கொண்டோம். அதுபோலவே நடந்தது.

இந்தச் செய்தி, எல்லா அரசு அலுவலர்களுக்கும் தெரிந்தது! அவர்கள் அன்றிருந்த சூழ்நிலையில் குன்றக்குடியில் நடந்த இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்குமாறு இல்லையென்று கைவிட்டு விட்டனர். மேலும் மகிழ்ந்தனர்! ஆயினும் காங்கிரஸுக்குள் இருந்த நம் மீதான எதிர்ப்பு அணி, இந்த நிகழ்ச்சியை அரசியலாக்கப் பார்த்தது. இந்த அணி முதல்வர் எம். பக்தவத்சலத்துக்கு எடுத்துக்கூறியது. முதல்வரும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தம் மீது வழக்குத் தொடருமாறு ஆணை பிறப்பித்தார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் எம்.எம். இராஜேந்திரன், இ.ஆ.பெ... இப்போது இவர் புதுடெல்லியில் நாடாளுமன்றத் துறைச் செயலாளராகப் பணி செய்து வருகிறார். கோட்டாட்சித் தலைவராக இருந்தவர், செந்தில்நாயகம் பிள்ளை, காவல் துறை அதிகாரி அலிசுல்தான். இவர் இயலாது என்று கூறிய துடன் நடுவணரசின் பணிக்குச் சென்றுவிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவர், முதல்வரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் பிடிவாதமாக வழக்குத் தொடர்வதிலேயே நின்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எம். இராஜேந்திரன் வழக்குத் தொடர இயலாது என்று மீண்டும் கண்டிப்பாக மறுத்து விட்டார். காவல்துறையும் அப்படியே! அன்று நமது நாட்டு அரசு அலுவலர்கள் இருந்த நிலை! நமது நாட்டு ஆட்சிமுறை மூன்று படிநிலைகளை