பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

189



பலதடவை பெரியார் நமது திருமடத்துக்கு வருகை தந்துள்ளார். முதல் வருகையின்போது ஆதீன மடத்து மரபுப்படி தலமரியாதை அவருக்கு வழங்கப்பெற்றது. அதில் திருநீறு அணிவித்தலும் உண்டு. அப்போது சின்னப் பட்டமாக இருந்த நடராஜ தேசிகர் தலைவர் பெரியாருக்கும் திருநீறு பூசிவிட்டார். பெரியாரும் தயக்கமும் மறுப்பும் இன்றிப் பூசிக்கொண்டார். திருநீறு பூசிக் கொண்டதை பற்றிக் கேட்ட போது, "நான் திருநீறு பூசிக்கொண்டது மகாசந்நிதானத்துக்காக, அது அவருக்குக் கெளரவத்தைக் கொடுக்கும் என்றால் நான் பூசிக்கொண்டது சரியே!” என்றார். இதுபோல உறவுகளைப் பேணிக் காப்பதில் விழிப்புணர்வு உள்ளவர் பெரியார்.

முத்துப்பேட்டைப் பகுதி த. கீழக்காடு கிராமத்தில் பழைய அரசியல் தியாகி - காங்கிரஸ்காரர் ஆர். எம். சோமுத் தேவர் இல்லத் திருமணம் 1957 ஜூலை மாதம் நடைபெற்றது. சோமுத் தேவர் இந்தத் திருமணத்துக்குப் பெரியாரை அழைக்க விரும்பினார். மாப்பிள்ளை நமது அணியைச் சேர்ந்தவர். எனவே, மாப்பிள்ளை திருமணத்துக்கு நம்மை அழைக்கிறார். அதுவரையில் தனி நபர்களின் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் வழக்கம் இருந்ததில்லை. மாப்பிள்ளையின் பிடிவாதத்தால் நாம் ஒப்புக்கொண்டோம். சோமுத்தேவர் மகன் ராஜமாணிக்கம் - நீலாவதி சோமுத் தேவர் மகள் பத்மாவதி - பன்னிர் செல்வம், சோமுத் தேவர் மகன் மகாலிங்கம் - செல்வநாயகி இவர்களின் திருமணம். திருமண நாள் வந்தது. நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் அணுகினோம். சமயச் சடங்குகள் இல்லாமலே திருமணத்தைப் பெரியார் வழியில் செய்யவும் விருப்பமில்லை. பெரியாருக்கும் நமக்குமுள்ள ஒரு பெரிய வேற்றுமை, பெரியார் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று எண்ண மாட்டார்; யோசிக்க மாட்டார்; பயப்பட மாட்டார். நாம் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணுவதுண்டு. இந்தப் போக்கு மேடைகளுக்கு மட்டுமே.