பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

229


னேஷியா சென்றிருந்தோம். அப்போது - ஜகார்த்தாவில் வரலாற்றுச் சின்னம் என்ற அடிப்படையில் அந்த நாட்டு அரசு பழைய சிவன்கோயில் ஒன்றின் இடிபாடுகளை எடுத்துக் கட்டிக் கொண்டிருந்தது. தென்கிழக்காசியாவில் ஒரு பழைய சிவாலயத்தைப் பார்த்ததில் நமக்குக் கொள்ளை மகிழ்ச்சி! அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களுடன் நாமும் சேர்ந்து கல்தூக்கிக் கொடுக்கும் சிற்றாள் வேலை செய்தோம். அந்தச் சமயம் எடுக்கப்பட்ட புகைப்படம் தமிழ் நாட்டுக்கு வந்து ஆனந்த விகடனில் வெளிவந்தது.

தமிழ்நாட்டு மக்கள் அன்பைப் பொழிகிறார்கள். ஆனால், ஒரு குறை! அழைத்திடும்போது வரமாட்டார்கள்! ஏன்? நாம் ஜாதி, மொழி, மதம் பெயரில் மக்களைத் திரட்ட விரும்பியதில்லை. இனிமேலும் விரும்பமாட்டோம். நமது நாட்டு மக்களோ ஏதாவது ஒரு வகையில் சிக்கியிருக்கிறார்கள். அதனால், நமக்குப் பின்னால் வெறிபிடித்த கூட்டம் இல்லை. ஜாதிச் சங்கங்களின் விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்ற நெறிமுறையைப் பின்பற்றுகிறோம். துறவிக்கு ஜாதி இல்லை என்பார்கள். ஆனால், நமது நாட்டில் துறவிகள்தான் ஜாதிகளைப் பாதுகாக்கிறார்கள்.

இந்து சமயம் உண்மையில் உயர்வானது; உலகம் தழுவியது. ஆனால், அதை இடையில் சின்னஞ்சிறு குட்டிச் சுவர்களை எழுப்பிக் கெடுத்துவிட்டார்கள். இதுவே குறை. இந்தக் குறையை நீக்க நாயன்மார்களும் ஆழ்வார்களும் சுவாமி விவேகானந்தரும் அருட்பிரகாச வள்ளலாரும் முயன்றனர். போதிய பயன் கிடைக்கவில்லை. வரலாறு என்பது ஒரு நாள் நிகழ்ச்சியல்லவே! தொடர்கதை தான். அதனால், இந்தச் சிந்தனை வாழ்வு மேலும் தொடர்ந்து நடக்கும். நமது வாழ்வில் புதிய சித்தாந்தங்கள் எதுவும் காணவும் இல்லை. காண ஆசையும் இல்லை. ஏன்! நமது பழமை மனிதம் தழுவியது; செறிவானது; செழிப்பானது; நீதி