பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

257



காவிரியும்-கணிதமிழும்

காவிரி கடலோடு கலப்பது உண்மை; ஆனாலும் கடல்நீர் முழுவதும் காவிரிக்கு வந்துவிட்டால் காவிரி நீரின் சுவை கெட்டுவிடும். இரண்டுக்கும் உறவில்லையென்றாலோ, காவிரியின் ஊற்றுவளம் குன்றும். எனவே, காவிரியும் வேண்டும்-கடலும் வேண்டும். காவிரிக்கும் கடலுக்கும் உறவு இருப்பது போல, உலக மொழிகளோடும், இந்திய மொழி களோடும் தமிழுக்கு உறவிருக்க வேண்டும். ஆனாலும், அவற்றோடு கலந்து விடாமல், தமிழ் தன்னுடைய தன்மையை தகுதிப்பாட்டை இழந்துவிடாமல் பாதுகாக்கப் பெற வேண்டும். நம்முடைய தமிழினத்தினுடைய தமிழ் உணர்வும் ஆற்றலும் முயற்சியும் இதற்குப் பயன்பட வேண்டும்.

மலரும்-மனிதனும்

செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குவது மக்களுக்கு மகிழ்ச்சி தருவதற்கு என்பதுபோல, நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரத்தக்கதாக அமையவேண்டும்.

பிரேக்கும்-நண்பர்களும்

வண்டிக்கு பிரேக் அவசியமாக இருத்தல் போல, மனிதர்களுக்கு அவர்களின் இயல்பான உணர்ச்சிப் போக்குக்குத் தடை போட்டு ஆற்றுப் படுத்தும் நண்பர்கள் தேவை.

கொடியும்-கொம்பும்

கொடியும் கொம்பும் ஒன்றாகி விடுவதில்லை. ஆனாலும் அவை இரண்டுக்கும் உறவிருக்கும். இவ்வாறு கொடிக்கும் கொம்புக்கும் உள்ள உறவு போல உலகின் எல்லா மொழிகளோடும் தமிழுக்கு உறவு இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் தழைக்கும்.