பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெறப்படுகிறது. கொம்பரில்லாக் கொடி என்ற உவமை அழகிய உவமை! சிறந்த தத்துவ விளக்கத்தைத் தரும் உவமை! நாமும், கொழு கொம்பில்லாக் கொடியாக அலமந்தழியாமல் இறைவனுடைய திருவருட் சார்பெனும் கொம்பினைப் பற்றிப் படர்ந்து உய்தி பெறவேண்டும். கொம்பில் படரும் கொடிகள் தமது மெல்லிய உறுப்புக்களால் கொம்பை இறுகச் சுற்றிக் கொண்டு கொம்போடு இணைந்து கொள்வதைப் பார்க்கிறோம். அதுபோல, நாமும், நம்முடைய உயிரைஆன்மாவை "கன்றாப் பூர் நடு தரி” என்று அப்பரடிகளால் குறிக்கப் பெறும் கொம்பினைத் தழுவிச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளவேண்டும். கொம்பினைத் தழுவிய கொடிபோல, இம்மை மறுமை இன்பங்களைப் பெற்றுத் தழைத்து விளங்க முயற்சிப்போமாக!

நாங்கூழ்

சிவஞானத்திற் சிறந்த-அறிவாற் சிவனே ஆய மாணிக்கவாசகப் பெருமான் மிக்குயர்ந்த தத்துவங்களை மிக எளிய உவமைகளால் விளக்குகின்றார். உயர்ந்த அறிவு கடுமையாக இருக்கும். ஆனால், உயர்ந்த அறிவோடு அனுபவமும் இருக்குமானால் நிச்சயமாக அந்த அறிவு எளிய வடிவம் பெறும் மாணிக்கவாசகர் சிறந்த அனுபவம் உடையவர்

நாங்கூழ், உழுத நிலங்களிடையே ஊர்ந்து திரியும் புழு -எலும்பில்லாதது. மெல்லிய தசைகளிலேயே ஆயது. ஆயினும், உழவியல் தொழில் வேளாண்மை செய்யும் குடிமக்களுக்குப் பெருந்துணை செய்வது மண்ணைக் கிண்டி வளமுறச் செய்வது; அதன் எச்சில் பட்ட மண் நல் உரமுடையது பல்வளங்கொழிப்பது என்று உழவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள். 'உழுவோர்க்கெல்லாம் விழுமிய வேந்து' என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பேசுகின்றார்.