பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தேவர்களுக்கிடையில் சண்டைகள் ! இப்படிச் சண்டைகளைப் பற்றியே இந்தியா ஏன் சிந்தித்துக் கொண்டிருந்தது என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சண்டைகளை மறப்பது அவசியம்.

இலக்கிய உலகத்திற்குள் நுழைந்தால், இந்தியமொழி இலக்கியங்கள் ஒரு பூங்கா என்று சொல்லலாம். பெரிய கருவூலமாக இருக்கின்ற உபநிடத்திலிருந்து, நம்முடைய இராமானுசர் காலம் வரையில், ஏன், நம்முடைய பாரதி காலம் வரையில் இலக்கிய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வந்தால், ஏராளமான படிப்பினைகள்! பழைய உபநிஷத்து ஒன்று கூறுகிறது.

“ஒன்றாக உழையுங்கள்! ஒன்றாக உண்ணுங்கள்!
ஒன்றாக இருங்கள், ஒன்றாக வாழுங்கள்!”

என்று.

இது வேதங்களின் மணிமுடிச் சிகரமாக உள்ள உபநிடத்தின் வார்த்தைகள். இன்றைக்கு எங்கே அப்படி வாழுகிறோம்? ஒன்றாக உண்ணுவதிலேயே சாதி முறைகள் குறுக்கிடுகின்றன. இராமகாதையை எடுத்துக் கொண்டால், கம்பன் அற்புதமாக ஒரு நாட்டை எண்ணிப் பார்க்கிறான். அவனுடைய லட்சிய நாடு அது. அவனுடைய கோசல நாடு அப்படியிருந்ததா? தெரியாது. அவன் கண்ட இலங்கை நாடு அப்படியிருந்ததா? சொல்ல முடியாது. ஆனாலும் கம்பன் தன்னுடைய இலட்சிய நாடு ஒன்றை தன்னுடைய காதையில் நினைவூட்டுகிறான். "கள்வரும், காவல் செய்வாரும் இல்லாத நாடாக இருக்கவேண்டும்” என்று ஆசைப்படுகிறான். எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் பெறவேண்டுமென்று ஆசைப்படுகின்றான். இன்று இந்த நாட்டினுடைய நிலைமை என்ன? எண்ணிப் பாருங்கள்.

புறநானூற்றுக் காலத்திற்கு வந்தால், உலக சர்வ தேசிய இளைஞனைப் போல விளங்குகின்றான் கணியன்