பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

301


அல்ல. நம்முடைய நாட்டில் அரசியலை, அரசியல் கட்சிகளிடமே ஒப்படைத்து விடுகிறார்கள்.

படித்தவர்கள், பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள், இவர்கள்கூட அரசியலைப் பற்றி பேச கூச்சப்படுகிறார்கள்பயப்படுகிறார்கள். தப்பித் தவறி பேசிவிட்டால் கட்சிக்காரர்களுக்குக் கடுஞ்சினம் ஏற்படுகிறது. அன்பு கூர்ந்து மன்னித்துக் கொள்ளுங்கள். அரசியல் சிந்தனை இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்றைக்கே மக்களாட்சி முறை வளரும்.

கோசல நாட்டில் இராமனுக்கு முடிசூட்டப் போகிற செய்தியறிந்தபோதும் மக்கள் மகிழ்ந்தார்கள். இராமன் காட்டுக்குப் போகிறபோதும் அழுதார்கள். அது நாட்டு அரசோடு மக்கள் சேர்ந்து இயங்கிய, இயக்கத்தினுடைய விளைவு. இன்றைக்கு நம்முடைய நாட்டு அரசியலில், ஆட்சியில் அந்த இயக்கத்தோடு மக்கள் சேர்ந்து இயங்கு கிறார்களா? இல்லையில்லை. நாடு கடன் வாங்கினால் நம்முடைய நாட்டு மக்கள் கவலைப்படுகிறார்களா ? அழுகிறார்களா? நாட்டுக் கடனை தீர்ப்பதற்காக ஒருவேளை சாப்பாட்டை தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்களா? சாப்பாட்டைத் தியாகம் செய்ய வேண்டாம். ஒரு தேநீரைத் தியாகம் செய்வார்களா? அப்படிப்பட்ட புரட்சி எண்ணத்தை நாட்டு மக்களுக்குக் கொடுத்தாக வேண்டும். மக்களை அரசு காப்பாற்றக் கூடாது. அரசை மக்கள் காப்பாற்ற வேண்டும்.

ஜனநாயகம் என்பது ஒரு முறை மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அது உணர்வு செறிந்தது. ஒழுங்கு செறிந்தது. ஒழுக்கம் செறிந்தது. இன்று எங்கு பார்த்தாலும் போட்டா போட்டிகள்! தலைமைக்கும் பெருமைக்கும் போராட்டங்கள்! இலட்சியத்தைப் பறிகொடுத்து விட்டுக் கூட பெருமை தேடுவார்கள் போலத் தெரிகிறது. இலட்சியம் பெரிது. இலட்சியம் துாய்மையானது. இலட்சிய வாழ்க்கை