பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

323


இருக்கிறார்கள். இவர்கள் நிலத்திற்கும் பாரம்! இவர்களை வையகம் சுமப்பதும் வம்பு. அதாவது பயனற்றவர்கள்.

தனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பைவிடத் தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன்தான் சமூகத்திற்குப் பயன்படுவான். சமூகத்தில் ஒரு நிலையான இடத்தை முன்னேறிப் பெறுவான். இதுவே வாழும் நியதி.

ஆழ்கடலின் மேலே புல் பூண்டுகள் மிதக்கும், செத்தைகள் மிதக்கும். ஆனால், முத்து ஆழத்தில்தான் கிடக்கும். முத்தை விரும்புவோர் ஆழ்கடலில் மூச்சடக்கி மூழ்கித்தான் முத்தை எடுக்கவேண்டும். அதுபோல, வாழ்க்கையில் அரும் பயனையும் வெற்றியையும் விரும்புவோர் உழைத்தல் வேண்டும்.

உடம்பு, உழைப்பினாலாயது. உழைப்பதற்கே உரியது. இரும்பு, பயன்படுத்தப் பயன்படுத்த உறுதிப்படும். நீண்ட நாட்களுக்கும் பயன்படும். உழைப்பில் பயன்படுத்தப்படாத இரும்பு துருப்பிடித்து அழியும்; விலை மதிப்பையும் இழக்கும். இரும்பு துருப்பிடித்து அழிவதைவிட, உழைப்பில் பயன்படு வதன் மூலம் தேய்வதே மேல்.

மனிதராய்ப் பிறந்தோர் எல்லாரும் விரும்புவது மகிழ்ச்சி! மகிழ்ச்சியை எளிதாக அடைவதற்குரிய ஒரே வழி. மிகவும் இரகசியமான வழி கடுமையாக உழைத்தலேயாம். அந்த மகிழ்ச்சியும் ஓரொருகால் உழைத்தலினால் கிடைக்காது. இடையீடின்றித் தொடர்ந்து உழைக்க வேண்டும்.

மனித குலத்தை வறுமைத்தி சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தீயை அணைப்பதற்குரிய முயற்சியுடன் கடின உழைப்புத் தராவிடில் இந்தத் தீ அணையாது. இந்தியாவை, கடந்த பல நூறாண்டுகளாகப் பசித்தீ உள்ளீடழித்து வருகிறது.