பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பிரிவுகள் தோன்றுவது! இந்தப் பிரிவுகள் உடனுக்குடன் மருத்துவம் செய்யப் பெற்றுச் சீர்செய்யப் பெறாவிடில் கூட்டுறவு வளராது.

கோடிக்கணக்கான செற்கற்களைக் கொண்டுதான் சுவர்கள் எழுப்பப்படுகின்றன. அவற்றில் அடுக்கப் பெறும் கற்கள் ஒன்றையொன்று தழுவித் தாங்கிக் கொள்வதன் மூலமே சுவர்கள் எழும்புகின்றன. அதுபோல, நாம் ஒவ்வொருவரும் பிறிதொரு நபரைத் தழுவித் தாங்கி அழைத்துக்கொண்டு போனால் கூட்டுறவு தோன்றும்; சமூகமும் தோன்றும்.

அதுமட்டுமா? கொத்தனார் சுவர் கட்டும்பொழுது இடைவெளியைச் சரிசெய்ய சல்லிக் கற்களைப் போடுவார். சல்லிக் கற்கள் கிடைக்காது போனால் முழுக்கல்லை உடைத்துச் சல்லியாக்கிப் போடுவார். ஆனால், சுவரில் சல்லி இருப்பது தெரியாது. சுவரின் வெளிப்புறத் தோற்றம் மட்டுமே தெரியும். சுவர் தன்னுள் அடங்கியிருக்கும் சல்லிகளைக் காட்டாது. முழுத் தோற்றத்தை மட்டும்தான் காட்டும்.

அதுபோல, மனிதருள்ளும் குணக் கேடர்கள் சிலர் இருக்கத்தான் செய்வர். பலவீனர்கள் இருப்பர். நலிந்தோர் இருப்பர். மனித சமூகத்தின் இந்தக் குறைகள் வெளியே தெரியாமல் நடந்துகொள்வதுதான் கூட்டுறவின் நோக்கம். வல்லவர்களும், வல்லமையற்றவர்களும், ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும், ஒருங்கு சேர்ந்து நடத்தும் இயக்கமே கூட்டுறவு.

கூட்டுறவில் அங்கத்தினர்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ, முதலீடு செய்யலாம். ஆனால் முதலீட்டின் அளவால் உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை. எல்லாருக்கும் ஒரே வாக்குத்தான்! கூட்டுறவு சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட நடுவு நிலையைப் பேணுதல் வேண்டும். அது மட்டுமல்ல. கூட்டுறவில் செய்யப்பெறும்