பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமுதாயத்திற்கும் குறிக்கோள் தேவை! இலட்சியம் தேவை! இன்று, இலட்சியம் உடைய மனிதர்களைத் தேடினும் காணக் கிடைப்பதில்லை. ஒரு சிலர், சின்னஞ்சிறு செயல்களையே இலட்சியம் என்று கருதிக் கொண்டுள்ளனர். வேறு சிலர் பணம் சம்பாதிப்பதையே இலட்சியமாகக் கொண்டுள்ளனர்.

கற்றவர்களும் அறிஞர்களும் வீரர்களும் பணம் சம்பாதிப்பதை ஒருநாளும் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ளமாட்டார்கள். சின்னஞ்சிறு செயல்கள் செய்வது, பணம் சம்பாதிப்பது இவையெல்லாம் இலட்சியங்கள் ஆகா. வாழ்க்கையின் படிக்கற்கள் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

"குறிக்கோள் இலாது கெட்டேன்” என்று பாடுகின்றார் அப்பரடிகள். உடலுக்கு ஆன்மா மரத்திற்கு வேர் மனிதனுக்கு இலட்சியம்; வாழ்க்கையில் மனிதன் அடிமையாக இருக்கக் கூடாது!

ஒரு வேலையை ஊதியத்தையே குறிக்கோளாகக் கொண்டு செய்வது அல்லது பயந்து கொண்டு செய்வது என்ற குணமிருந்தாலும் அடிமைத் தனமேயாம்;

ஒரு வேலையை - ஒரு பணியை அந்த வேலைக்காகவே தாமே ஆர்வத்துடன் பயன்பாடு கிடைக்கும் வகையில் செய்வது சுதந்திரமான வாழ்க்கையாகும். தாம் எடுத்துக் கொண்ட பணியை முறையாகச் செய்வதே இலட்சியம், சுதந்திரம்; இன்பம்!

ஒருவன் தன்னுடைய வாழ்க்கையின் இலட்சியம் எது என்று சிந்தனை செய்து முடிவு செய்ய வேண்டும். ஒரு சிலருக்குத் தன் வாழ்க்கைக்கு என்று இலட்சியம் நிர்ணயம் செய்துகொள்ளும் சூழல் அமையாது போகலாம். அப்போது நீரும் நிழலும் போலத் தன்னுடைய தோழமையாகப் பழகும் சில நண்பர்களையும் உடன் சேர்த்துக் கொண்டு ஒரு கூட்டு இலட்சியமாக எடுத்துக் கொள்ளலாம். பலர் வாழ்வில்