பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

434

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆன்மிகம் விலை மதிப்பிட முடியாத ஒரு செல்வம், ஆன்மிகத்தில் செழித்தவர்கள் முகத்தில் ஒரு பொலிவு புன்முறுவல் தோன்றும்; பரிவு வெளிப்படும்; பண்பாடு இருக்கும். ஒருவன் ஆன்ம சக்தி உடையவன் என்பதை அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் காணலாம். எடுப்பான தோற்றம் ஆன்மிகம் வழங்கும் கொடை ஆன்மிக நலம் பொருந்தியவன் வழங்கும் சொற்கள், அவனுடைய ஆன்மா அன்பில் நனைந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்தும்.

ஒவ்வொரு ஆன்மாவும் ஆன்ம சக்தியால் வளர முடியும். வாழ முடியும். சொற்கள், செயல்கள் இவை யெல்லாம் உயர்ந்த ஆன்மாவை இனம் காட்டும் அடையாளங்கள். நமது ஆன்ம சக்தியை மற்றவர்களுக்கு உணர்த்தும் சாளரங்களே கண்கள். சொற்களே தூதர்கள். முகத்தால் அமர்ந்தினிது நோக்கி, இன்சொல் கூறி, ஈத்துவந்து மகிழ்தலையே திருவள்ளுவம் பாராட்டும்.

மருந்து மரம் தன் நன்மை நோக்காது, தனக்கு வரும் வெட்டுக்களையும் ஏற்றுக் கொண்டு, மற்றவர்கள் நோய்க்கு மருந்து வழங்கும். இதுவே ஆன்மிகத்தின் பண்பு.

ஆன்மிகம் எப்போதும் அறிவைத் தேடும்; அன்பை வழங்கும்; வாழ்விக்கும். ஆன்மிகம் அருள் பழுத்த வாழ்வு; சின்னங்களும், அடையாளங்களும் மட்டும் ஆன்மிகம் அல்ல. அவை ஆன்மிக வளர்ச்சிக்குத் துணை செய்யும் சாதனங்களாக அமையக் கூடும். அப்படி அமைந்தால் வரவேற்கத் தக்கதே. இன்று பெரு வழக்காக மதத்தின் பெயரில் நடைபெறும் சடங்குகள் ஆன்மாவைத் தொடுவது கூட இல்லை.

ஆன்மிகம் மனிதத்தின் விழுமிய பயன். ஆன்மிகத்தின் மறு பெயர்தான் மனித நேயம், ஆன்மிகம் ஆன்மநேய ஒருமைப்பாடுடையது. ஆன்மிகம் சன்மார்க்க நெறி; பொது