பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

454

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


அதனினும் உயர்ந்த சமய வாழ்வின் நலத்தை அழகாக எடுத்துக் காட்டுகிறார்கள். மக்களை மக்களாக மதிக்கச் சொல்லிக் கொடுப்பது ஜனநாயகம். மக்களை கடவுளாக மதித்து அன்பு செய்யக் கற்றுக்கொடுப்பது சமயம். தன்னோடு ஒப்பாக நினைப்பதிலும் தன்னினும் உயர்ந்ததாக மதிப்பிடுதல் பெரிதும் நன்மை பயக்கும் என்பதற்கும் ஐயமுண்டோ?" என்னும் பகுதி பொன்னெழுத்திற் பொறிக்கப் பெறத்தக்கதாகும்.

இயல்வது கரவாமல் வாழும் வாழ்க்கையையும், தமிழிலக்கியம் காட்டும் நெறியையும், தமிழின் பலவகை மேன்மைகளையும் அடிகள் எடுத்துக் காட்டுகிறார்கள். 'இன்று தமிழ் நாட்டில் ஒரு புது நோய் பரவி வருகிறது. அதுதான் வசன கவிதை என்பது. யாப்பிலக்கணம் கைக்குள் அடங்காமற் போய் வசனத்தை ஆசிரியர்கள் கையாண்டால் அது கவிதையாகிவிட முடியாது' என்பதை மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் பலமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வள்ளுவர் வாக்கும் வாதவூரர் மணிமொழியும் பல இடங்களில் சொல்லாலும் பொருளாலும் ஒத்து நடப்பதை ஒரு கட்டுரையில் தெளிவாக்குகிறார்கள். அடிகளுக்குத் திருவாசகத்தில் ஈடுபாடு மிகுதியென்பதைப் பலர் அறிவார்கள். அந்த ஈடுபாட்டை இந்தக் கட்டுரையிலும் காணலாம். தமிழிசையைப் பற்றிய கட்டுரையில் ஏழு நரம்புகள் சேர்ந்து அமைந்தவை பண்கள் என்னும் போது, "ஒளியில் ஏழு வகையான நிறங்கள் இருந்து இயங்குதல்போல, ஒலிகளும், ஏழு வகைகளாக இயங்கி வெளியிற் காரியங்களை நிறை வேற்றுகின்றன” என்று எழுதுகிறார்கள். இது புதிய கருத்து, பாராட்டத்தக்கது. தமிழக எல்லையைப் பற்றிய கட்டுரைக்கு ஓரளவு பயன் கிடைக்கவிருக்கிறது. அது முற்றும் நிறைவேற இறைவன் திருவருள் செய்ய வேண்டும்.

இறுதிக் கட்டுரை மணிவாசக நினைவிலே நம்மை ஆழ்த்துகிறது. புத்தகத்தை மூடும் போது அடிகளாரும் வாதவூரடிகளாரும் நம் உள்ளத்தை விட்டு அகல்வதில்லை.