பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

461


என்ன வழி வகைகளை மேற்கொண்டோம் என்று சாடுவதிலே உண்மை இருக்கத்தான் செய்கிறது. இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கிக் காக்க, நிலம், சாதி, சமயம், இனம், மொழி ஆகியவைகளுக்கப்பால் நின்று நிலவி ஒளிரும் திருக்குறளைத் தேசிய இலக்கியமாக இனியாவது அறிவித்து வள்ளுவத்தைப் பரப்ப வேண்டும் என்று தம் வேட்கையை வெளியிடுகிறார்.

சமுதாய முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி சமய வளர்ச்சியின் தேவையை உணர்த்தும் அரிய கருத்துக்கள் பலவற்றையும் அவருக்கே உரிய ஆற்றொழுக்கு நடையில் அளித்திருக்கிறார்கள். தமிழில் திருமுறை வழிபாட்டு முறையை மேற்கொள்ளுமாறு தமிழகத்து இறையுணர்வு மிக்கோரை வலியுறுத்தும் பாங்கு பெரிதும் பாராட்டி மகிழ்வதற்குரியதாகும்.

அடிகளார் அவர்கள் எழுதியுள்ள 'வாழ்க்கை விளக்கு' என்னும் இந்நூல் படிக்க இன்பம் பயப்பதோடு மட்டுமின்றி புதிய சிந்தனைகளைப் படிப்போர் மனதிலும் கிளறிவிடும் ஆற்றல் பெற்றனவாய் மிளிருகின்றன.

அடிகளார் அவர்கள் எழுதியருளிய 'வாழ்க்கை விளக்கு' என்னும் இந்நூல் தமிழக மக்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப்படும் என்பதில் ஐயமில்லை.

அன்பன்,
மு. கண்ணப்பன்


அணிந்துரை
(வாழ்க்கை விளக்கு)


டாக்டர் ந. சஞ்சீவி, எம்.ஏ., எம்.லிட்., பிஎச்டி.,
டிப். மானிடவியல், டிப். அரசியல் - ஆட்சியியல்.
தமிழ்த்துறைத் தலைவர்
சென்னைப் பல்கலைக் கழகம்
தவத்திரு குன்றக்குடி அடிகளார். தமிழ்த் திரு நிறைந்த
பெரியார், நம்மிடையே இன்று வாழும் சைவத்தமிழ்