பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

512

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


கடினமானவையல்ல, அன்றாட வாழ்க்கையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் சைவம் கூறும் பல மார்க்கங்களில், தெரிந்தும் தெரியாமலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிவ வழிபாட்டினைச் செய்து வருகின்றார்கள். சைவ தத்துவ விளக்கம் அவர்களுக்கு இயல்பாகவே கிடைக்கக்கூடிய ஒன்று. அடிகளார் சைவ சித்தாந்த தத்துவங்களை விளக்கியிருப்பது அறிஞர்களுடைய எதிர்பார்ப்பையும் ஈடுசெய்யும்.

சைவம் ஏட்டில் எழுதி வைக்கப்பட்ட சமயமன்று. பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் உணர்வில் கலந்த ஒன்றாகும். பல உயர்ந்த கோட்பாடுகளும் பண்பாடுகளும் தமிழ் மக்களிடையே பரவித் தமிழ் மக்களின் ஆன்மீகத்திற்கு அடிப்படையாக இருந்து வருவதும் சைவ சமயமே. உண்மைச் சைவர்கள் தங்கள் எளிமையான வாழ்க்கையாலும் உயர்ந்த பண்பாடுகளாலும் மக்கள் மையத்தில் எடுத்துக்காட்டாக இன்றும் விளங்கி வருவதைப் பார்க்கின்றோம். சமுதாய மேம் பாட்டிற்குச் சைவம் இதுகாறும் எத்துணை தொண்டாற்றியுள்ளது என்பதை இங்குக் கூறத்தேவையில்லை.

இவற்றையெல்லாம் எளிதில் விளங்கும் வகையில் இங்குத் தரப்பட்டுள்ள அடிகளாரின் கருத்துகள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை. இவற்றைப் படிக்கும் பொழுது தமிழனாகவும், சைவத்தைச் சார்ந்தவனாகவும் ஒருவன் இருப்பது எத்தகைய பேறு பெற்ற ஒன்று என்கின்ற உணர்வினைப் பெறலாம்.

இத்தகைய அரியதொரு நூலை வெளிக்கொணர முயற்சிகளை எடுத்துக் கொண்ட திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. வணிக நோக்கில் நூல்களை அவர் வெளியிடுபவரல்லர். தமிழிலும், சைவத்திலும் அவருக்குள்ள ஆழ்ந்த பற்றின் காரணமாக இத்தகைய பணிகளை அவர் ஆற்றி வருகின்றார். அவருடைய அன்பு உள்ளமே இவற்றுக்கெல்லாம் ஒரு பெரிய தூண்டு கோலாக அமைந்து அவரை இயக்கி வருகின்றது.