பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

543



குன்றக்குடித் திருமடத்தில் அருள்நெறித் தந்தையவர்கள்-இளைய சந்நிதானமாய்ப் பொறுப்பு ஏற்ற பின் சந்தித்த இடையூறுகள், மகாசந்நிதானம் கருத்து மாறுபாடு கொண்டிருந்த பொழுது காட்டிய பொறுமை, சிந்திக்கத் தக்கது. கோவலனைப் பிரிந்த கண்ணகி, தன் கொழுநனைப் பிரிந்த துயரைக் கடவுளிடம் கூடச் சொல்லக் கூடாது என்ற திண்மை கற்பு வாழ்க்கையின் சிறப்பாகும். அதுபோல், துறவு வாழ்க்கையிலும் ஏற்படுகின்ற சோதனைகளைக் கண்டு தளர்வது கூடாது! எனவே, ஏற்ற வாழ்வின் இடர்களை இனிமையாக ஏற்பது துறவு வாழ்வுக்கும் பொருந்தும் என்று வாழ்ந்து காட்டினார்கள்!

தமிழ் அருச்சனைப் போராட்டம்! தமிழகத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பெற்ற நிகழ்வு! எந்தத் தீந்தமிழ்ப் பாக்கள் இறைவனை இன்ப அன்பில் நனையச் செய்தனவோ, எந்த பண் சுமந்த தீந்தமிழ்ப் பாக்களுக்காக மண் சுமந்து இறைவன் பொன்மேனி புண் சுமந்ததோ, எந்தத் தமிழ் கேட்கும் இச்சையால் நாளும் படிக்காசு நித்தம் நல்கினானோ “மண்மேல் நம்மைச் சொற்றமிழ். பாடு” என்று நற்றமிழ்ச் சுந்தரருக்கு எதற்காக ஆணையிட்டானோ. திருமறைக்காட்டின் திருக்கதவுகள் திறந்ததும் அடைத்ததும் எந்தத் தீந்தமிழாலோ அந்தத் தேனினும் இனிய தீந்தமிழ்ப் பாக்கள் அவன் திருச்செவியில் ஓதத் தடையிருந்த காலம்! அந்தத் தமிழ் அருச்சனைக்கு நடத்திய போராட்டம்; மிகப் பெரிய எழுச்சியினைத் தந்தது - நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறிய ஆலவாயண்ணல் அகம் மலரத் தமிழ் அருச்சனைப் போராட்டம் வெற்றி பெற்றது.

1962-இல் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் தமிழருச்சனை அன்றைய அமைச்சர் எம். பக்தவத்சலம் , அவர்களால் தொடங்கி வைக்கப் பெற்றது. அதுதான், “நாமார்க்கும் குடியல்லோம்!” என்று ஓங்கி முழங்கிய