பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

71


வேண்டும்?" என்றார்கள். நமக்குக் குருளையர் சட்டை கேட்க வேண்டும் என்ற எண்ணம். ஆனால் பயம்! கேட்கத் தோன்றவில்லை! தயக்கமும் அழுகையும் வந்தது, உடனே பிள்ளையவர்கள் நம்மை அருகில் அழைத்து "ஏன் அழுகிறாய்.என்ன வேண்டும்?” என்று கேட்டார்கள். நாம் "குருளையர் சட்டை வேண்டும்” என்று கேட்டுவிட்டோம். "ஏன் வீட்டில் வாங்கித் தரவில்லையா?” என்றார்கள். "வசதியில்லை என்று கூறிவிட்டார்கள்” என்றோம். "உன் வீட்டில் யார் இருக்கிறார்கள்?" என்று கேட்டார்கள். "அம்மா, அண்ணன் இருக்கிறார்கள்” என்று பதில் சொன்னோம். "அண்ணன் என்ன செய்கிறார்?" என்று கேட்டார்கள் பிள்ளையவர்கள். "பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கிறார். பெயர் கோபாலகிருஷ்ணன்' என்று பதில் கூறினோம். "அப்படியா? சரி” என்று சொல்லிவிட்டு ஐம்பது ரூபாய் கொடுத்தார்கள் பிள்ளையவர்கள். குருளையர் சட்டை தைத்துக் கொண்டோம். அதன்பிறகு பிள்ளை அவர்களுடன் உறவு நிறை நிலாப்போல வளர்ந்தது. பிள்ளையவர்கள் நமது அண்ணன் கோபாலகிருஷ்ணனை, பல்கலைக் கழக அறைக்கு அழைத்து விவரங்களைத் தெரிந்து கொண்டு, குடும்பத்தையே வளர்த்தார். வசதியில்லாத குடும்பத்துக்கு வசதி உண்டாக்கினார். ஏன்..இன்றும் நாம் உடல்நலத்துடன் இருப்பதற்குரிய காரணம் பிள்ளையவர்கள் வீட்டுத் தயிர்ச் சோறும் வடகமும் என்பதை நினைவு கூர்வதில் மகிழ்வு ஏற்படுகிறது.

நமது தந்தை பரம்பரையாக இருந்த ஐந்து வேலி நிலத்தை விளையாடித் தோற்றுவிட்டார். பிள்ளையவர்கள் வழக்கறிஞராயிற்றே! குடும்பச் சொத்தை மீட்க வழக்கு ஆலோசனைகளும் நிதியும் கொடுத்து உதவினார்கள். சொத்தும் கிடைத்தது. அந்த நன்றிக்கடனுக்கு நாம் குன்றக்குடி வந்த பிறகு 1953-ம் ஆண்டில் பிள்ளையவர்களைக் குன்றக்குடிக்கு அழைத்துப் பாராட்டி வைர மோதிரம் அணிவித்து மகிழ்ந்தோம்.