பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

87


அனுதாபி என்றெல்லாம் கூறுகிறார்கள். அதெல்லாம் எனக்குத் தெரியும். அடிகளார் நீண்ட நாட்களாக முரட்டுக் கதர் கட்டும் காங்கிரஸ்காரர், சில சமயங்களில் 'தமிழ்' 'தமிழன்' என்று பேசுவார். அவ்வளவு தான், அலட்டிக் கொள்ளாதீர்கள்” என்று பேசினார்.

ஒரு தடவை காமராஜரிடம் “காங்கிரஸ் உட்கட்சிச் சண்டை தலைவலியாக இருக்கிறது நமக்கு அரசியலில் ஈடு பாடில்லை, நாட்டுப் பற்றோடு ஏதாவது பணி செய்ய ஆசை! ஆதலால் காங்கிரஸ் கட்சியில் கிராமப் பணி புரிபவர் களுக்கென்று ஒரு பிரிவைத் தொடங்குங்கள். அந்தப் பிரிவில் நாம் வேலை செய்கிறோம்” என்று கூறினோம். தலைவர் காமராஜர் "நல்ல யோசனை! பார்க்கலாம்” என்று கூறி விட்டு, “ஆனால், போட்டிக்கு அங்கேயும் வரமாட்டார்களா, தொல்லை தரமாட்டார்களா, என்ன? ஆதலால் இருக்கிற இடத்திலேயே இருந்து கொண்டு கிராமப் பணிகளைச் செய்யுங்கள். ஆனால் ஒன்று... கட்சிக்காரர்களில் இவர் நல்லவர், அவர் நல்லவர் . என்று பிரித்துப் பேசாதீர்கள்! கண்ணன் கடவுள் தானே! அவனாலேயே துரியோதனனை விலக்க முடிந்ததா? துரியோதனன் - பாண்டவர்கள் இரண்டு அணியினரையும் சரிக்கட்டிக் கொண்டு சென்றான். துரியோதனனுக்குப் படைகளைக் கொடுத்தான்! பாண்டவர்களுக்காகத் தானே போராடினான். அப்படித்தானே பாரதம் சொல்கிறது. கண்ணனைவிட நாம் என்ன திறமைசாலிகளா? ஆதலால், எல்லாரையும் அணைத்துக்கொள்ளுங்கள்!” என்று ஆலோசனை கூறினார்.

ஒரு நாள் காலைச் செய்தித்தாளில் ‘தலைவர் காமராஜர் தி.மு.க. தலைவர் என்.வி. நடராசன் இல்லத் திருமணத்துக்குச் சென்றார். காரிலிருந்து இறங்கித் திருமண வீட்டுக்குள் செல்ல இயலவில்லை. அதனால் மணமக்கள், காருக்கே வந்து வாழ்த்துப் பெற்றார்கள்!' என்ற செய்தியைப் பார்க்க நேரிட்டது. செய்தி மிகவும் கவலையைத் தந்தது.