பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிலையில் உள்ளவன் கரடு முரடான மலையில் செல்கின்றான். அவன் அங்கிருந்து தவறி விழுந்தால் அவன் கதி அதோகதிதான். "புறங் குன்றி கண்டனையரேனும் அகங் குன்றி, மூக்கிற் கரியாருடைத்து” எனல் காண்க. தவறி விழுந்தாலும்கூட பயனற்ற வாழ்க்கையாக நாட்டிற்கே நலம் பயக்காத வாழ்க்கையாக அமைந்துவிடும் என்ற காரணமாக ஒரு சில அதிகாரத்திற்குப் பின் வைத்தார்.

இல்லறத்தைப் பாராட்ட வள்ளுவருக்கு 'அறம்' என்ற ஒரு சொல் கிடைத்துவிட்டது. 'அறம்' என்ற சொல் பாராட்டப்படுகிறது. ஆனால் துறந்தார் நிலை சொல்லுக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்டது. துறந்தார் நிலையைச் சொல்லச் சொல் கிடைக்கவில்லை. எண்ணம் கிடைக்க வில்லை. ஆகையால்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று

என்றார். இதனாலும் துறவின் மாட்சி புலனாகும். இருந்தாலுங்கூட பண்டித முத்துசாமிப் புலவர் சொன்னதுபோல் இன்றைக்கும் இந்நாட்டில் துறவு பாராட்டப்படுவதில்லை. ஏன்? அவர்கள் அப்படியில்லை. அதனால்தான் வள்ளுவர் “மழித்தலும்...விடின்” என்றார். மழித்தலும் நீட்டலும் இந்த நாட்டுக்குத் தேவைதான். பழிப்பற்ற வாழ்வை மேற்கொண்டிருந்தால் தேவைதான். ஆகத் திருவள்ளுவர் இரண்டையும் பாராட்டுகிறார். அதனால்தான் பேரறிஞர், “He was not an age but for all time" என்பதாக சொன்னார்.

எந்தக் காலத்திற்கும், எந்த நூற்றாண்டிற்கும், பல்வேறு காலத்திற்கும், வருகிற சமுதாயம் அனைத்திற்கும் வேண்டியவர் திருவள்ளுவர் என்பதை நினைவுபடுத்தி அந்த அருமைப் பெரும் புலவரை உள்ளக் கோயிலில் வைத்து