பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



21


வேலிகள், சட்டங்கள், அரசாட்சிகள், சிறைக் கூடங்கள் மானுட வாழ்க்கையில் இடம் பெறலாயின.

இன்று மனிதன் களிப்பை-அமைதியைத் துய்ப்பதில் வெற்றி கண்டானில்லை. மாறாக அமைதியின்மை, துக்கம் இவைகளையே அனுபவிக்கிறான். இந்த அவலம் ஏன்? உலகந் தழீஇய ஒட்பத்திற்கே விரிவு உண்டு, ஊக்கம் உண்டு. இந்த ஒட்பம்-அறிவு தனக்குரிய இயலாமையைப் பற்றி மட்டும் கவலைப்படுவதில்லை; அலட்டிக் கொள்வதில்லை.

மானிட உலகத்தின் தேவைகள் நிறைவேறாமல் நமது தேவை மட்டுமே நிறைவேறும்பொழுதுதான் தீமைகள் கால் கொள்கின்றன. கடைசியில் இவன் தேவையும் நிறைவேறுவதில்லை; ஒரோவழி நிறைவேறினாலும் துய்க்க இயல்வதில்லை. ஒரே ஒரு மாமிசத்துண்டு. இவற்றிற்குக் காத்திருக்கும் பருந்துகளின் எண்ணிக்கையோ மிகுதி. என்ன ஆகும்?

உலகம் இல்லாமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே சிறந்த கொள்கை-கோட்பாடு. உல்கத்தை-இந்த உலகத்தின் இயக்க அமைதிகளை அறிந்து கொண்டு இந்த உலக அமைதிகளுக்கு ஏற்றவாறு-இசைந்தவாறு ஒழுகும் உரம் நம்மிடத்தில்லை.

"சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு"

(27)

என்பது திருக்குறள்.

மானுட உடலமைப்பில் பொறிகள் ஐந்து. இவை முறையே மெய், வாய், கண், மூக்கு, செவி என்பனவாம். இவை அறிவுக் கருவிகள்; நுகர்தலுக்கு-அனுபவித்தலுக்கு உரிய கருவிகள். இவற்றை அறிவுக் கருவிகள் என்று கூறினாலும் இவை முழுமையான அறிவுக்கருவிகள் அல்ல. இவற்றை அறிவு வாயில்கள்-என்று கூறுவதே பொருந்தும்.