பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



405


எண்ணுவன நிகழும்! மக்கள் திருவள்ளுவர் சிலையை ஏற்பர்! இது உறுதி! அதே போழ்து கடமையை மறந்து விடாதே!

இன்ப அன்பு
அடிகளார்
59. வேதாகமக் கல்லுரி

இனிய செல்வ,

இன்று தமிழ் நாட்டில் நடைபெறும் விவாதம் எது? ஆம்! "வேதாகமக் கல்லூரி” அமைப்பது குறித்துத்தான் எல்லாரும் பேசுகிறார்கள்! தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண் பமைந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாடு அரசு வேதாகமக் கல்லூரி ஆரம்பிப்பதாக அறிவித்தார். அறிவித்தது தான் அறிவித்தார்! இந்த அறிவிப்பின் எதிரொலியாக அரசியல் அரங்கத்தில், மக்கள் மன்றத்தில் உள்ள பலரும் ஆதரித்தும் எதிர்த்தும் அறிக்கை தந்துள்ள வண்ணம் உள்ளனர்! முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடுமையாக ஆட்சேபணை செய்கிறார்! இனிய செல்வ, கலைஞரின் ஆட்சேபணையை நம்மால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை! திருக்கோயில் அர்ச்சகர்களாக சாதி, குல வேறுபாடின்றி அனைத்துச் சமூகத்தினரை நியமிப்பதற்கு வழி செய்யும் சட்டத்தை கலைஞர் இயற்றினார். ஆனால், அந்த முயற்சியை கலைஞர் தொடர்ந்து மேற்கொள்ளவில்லை. அதற்கு உண்மையான காரணம் என்ன வென்று தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்திய உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு அதற்குத்தடை என்பது உண்மையல்ல. இனிய செல்வ, சென்ற கால நிகழ்ச்சியை அதன் காரண காரியங்களை ஆராய்வானேன்? இன்றைய மாண்பமைந்த முதலமைச்சர் அவர்கள் வேதாகமக் கல்லூரி தொடங்கி அதில் ஆதி திராவிடர்களையும் சேர்த்துப் படிக்க வைப்பதாக அறிவித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் இந்து சமூக வரலாற்றில் ஒரு திருப்புமையம் என்பதை யார்தான்