பக்கம்:குமண வள்ளல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. குமணன் அரசு துறத்தல்

குமணன் பெருஞ்சித்திரனரிடம் அன்பு பூண்டதுபோலவே வேறு பல புலவர்களையும் ஆதரித்தான். வர வர அவனைத் தேடி வரும் புலவர்கள் கூட்டம் அதிகமாயிற்று. அவர்களுக்கு வேண்டியவற்றை வாரி வாரி வழங்குவதில் அவ் வள்ளல் சிறிதும் சளைக்க வில்லை. புலவர்களுடன் பேசி இன்புறுவதும் விருந்து அருந்துவதும் பரிசில் வழங்கி விடை கொடுப்பதுமே, அவனுடைய பொழுது போக்காக இருந்தன.

அரசனுக்கு நாடுகாவல் முதலிய கடமைகளும் உண்டு. அவற்றையும் கவனித்துச் செய்யாவிடின் பகைவர்கள் அவனை வீழ்த்துவதற்கு வேண்டிய சூழ்ச்சியைச் செய்வார்கள். குமணனுடைய நிலையும் அப்படி ஆயிற்று. ஆனால் அவனுக்குப் புறப் பகைவர் யாரும் இல்லை. அயல் வேந்தர்களும் அயல் நாடுகளில் உள்ளவர்களும் அவனிடம் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். புலவர்கள் பரப்பிய புகழ் அவர்கள் காதில் விழுந்து அத்தகைய மதிப்பை உண்டுபண்ணியது.

ஆனால் அவனுடைய சொந்தத் தம்பிக்கு அவன் செய்வது பிடிக்கவில்லை. புலவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்துக் குமணன் ஓட்டாண்டி யாகிவிடுவான் என்று அவன் அஞ்சினன். ‘இன்னும் சில காலத்தில் இவன் தன் நாட்டை விற்றுக் கொடுக்க வேண்டியது தான். வரும் புலவர்களுக்கு யானையையும் குதிரையையும் நெல்லையும் பொன்னையும் கொடுத்துக் கொண்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/79&oldid=1362701" இலிருந்து மீள்விக்கப்பட்டது