பக்கம்:கேரக்டர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

'நாலு பேர் சேர்ந்து செய்கிற நல்ல காரியங்களில் சீட்டாட்டத்தைப் போன்ற சிறந்ததொரு பணி வேறொன்றும் கிடையாது' என்பது முத்தண்ணாவின் மணி மொழிகளில் ஒன்று. இராம சரித்திரம் சொல்லப்படும் இடங்களிலெல்லாம் அநுமார் பிரசன்னமாகியிருப்பார் என்று கூறுவது உண்டல்லவா? அதைப்போலவே சீட்டுக் கச்சேரி நடைபெறும் இடங்களிலெல்லாம் முத்தண்ணா பிரசன்னமாகியிருப்பார்!

எங்கேயாவது குழப்பம், கலவரம் ஏற்படுகிறபோது சர்க்கார் நாலு பேருக்குமேல் தெருவில் கூடக்கூடாது என்று 144 உத்தரவு போட்டால். 'நாலு பேர் வீதிகளில் தானே கூடி நிற்கக்கூடாது? வீட்டுக்குள் கூடிச் சீட்டாடுவதற்குத் தடை யில்லையே!' என்பார் அவர்.

விடுமுறை நாட்களில் முத்தண்ணாவின் தோழர்கள் அவருடைய வீட்டுக்கு வந்து,"என்ன முத்தண்ணா, கச்சேரி ஆரம்பிக்கலாமா?" என்பார்கள். அவ்வளவுதான்; முத்தண்ணா பாயைப் பிரித்துப்போட்டுச் சீட்டைக் குலுக்கத் தொடங்கினால் அப்புறம் பிரளயமே வந்தாலும் தெரியாது. அன்று முழுவதும் முத்தண்ணா வீட்டில்தான் அவ்வளவு பேருக்கும் டிபன் காப்பி சப்ளை!

முத்தண்ணாவின் மனைவி, "உங்களுக்கு என்ன வேலை. வீட்டிலே ஒரு படையைச் சேர்த்து வைத்துக்கொண்டு?" என்று எரிந்தெரிந்து விழுவாள். முத்தண்ணா அவ்வப்போது ஆட்டத்திலிருந்து நழுவிச் சமையலறைப் பக்கம் போய் மனைவியைச் சமாதானப்படுத்திவிட்டு வந்து உட்காருவார்.

முத்தண்ணாவின் குழந்தைகளுக்கும் அன்றெல்லாம் ஓயாமல் வேலை இருந்து கொண்டிருக்கும்.

"கடைக்குப் போய்ச் சீவல் வாங்கிண்டு வாங்கடா, கூஜாவிலே தண்ணி கொண்டு வாங்கடா!" என்று அவர்களை ஏதாவது ஏவிக்கொண்டேயிருப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/32&oldid=1478900" இலிருந்து மீள்விக்கப்பட்டது