பக்கம்:கேரக்டர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவது அந்த ரயிலில் அடிக்கடி நடைபெறும் சர்வ சாதாரண நிகழ்ச்சி!

ஆனால், அன்று அந்த ரயிலில் புதிதாக வந்த கார்டுக்கு இந்த விஷயம் தெரியாது. ரயில் நிறுத்தப்படவே அவர் பரபரப்புடன் கீழே இறங்கி வந்து, "யார் சங்கிலியை இழுத்தது?" என்று அதிகாரத்துடன் கேட்டுக்கொண்டே ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாகப் பார்த்துக்கொண்டு வந்தார்.

ஒருவரும் அவருக்குப் பதில் சொல்வதாகக் காணோம். கடைசியாக, துளசிங்கம் இருந்த கம்பார்ட்மெண்டில் வெளியே, ஒரு தகடு துருத்திக்கொண்டிருப்பதைக் கண்ட கார்டு, "யார் இழுத்தது? உண்மையைச் சொல்லிவிடுங்கள். இல்லாவிட்டால் ரயில் போகாது. அபராதம் ஐம்பது ரூபாய்" என்று ஆவேசம் வந்தவர்போல் கோபமாகப் பேசினார்.

துளசிங்கம் தலையை வெளியே நீட்டி, "இன்னாய்யா! இப்ப இன்னாய்யா சொல்றே?" என்று கார்டைப் பார்த்துக் கேட்டான்.

"சங்கிலியை யார் இழுத்தது?" என உறுமினார் கார்டு.

"ஏன்? நான் தான் இழுத்தேன். இப்ப இன்னான்றே?"

"காரணமில்லாமல் சங்கிலியை இழுத்தால் அபராதம் அம்பது ரூபாய்னு தெரியாது உனக்கு?"

"குட்றா இவருக்கு ... அம்பது ரூபா... வாங்கிக்கினு போவாரு. கன்னிப்பா...யார்ரா இவரு புச்சாக்கிறாரு கார்டு? நம்ப பழைய கார்டு வாசதேவராவ் வல்லியாடா? அதானே பார்த்தேன். ரயிலு நிண்ணதும் ஓடியாந்துட்டாரே! யோவ்! தாயக்கட்டை உளுந்துடுச்சு. வண்டியை நிறுத்தி எடுத்துக்கினேன். இப்ப இன்னாய்யா பூடிச்சு உனக்கு? பித்தளை தாயக்கட்டையாச்சே. போயிடுச்சுன்னா நீ குடுப்பியா? கொடியைக் காட்டி வண்டியை உடுய்யா, சர்தான்; நீட்டா போயிக்கினே இரு. டேய், இவுருக்கு இந்த லயன்லே பழக்கம் இல்லை போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/43&oldid=1479098" இலிருந்து மீள்விக்கப்பட்டது