பக்கம்:கேரக்டர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

போது இங்கிலீஷ் வார்த்தைகள் நீர்வீழ்ச்சிபோல் வந்து விழுகிற அழகு இருகிறதே. அது ஒன்றே போதும்!

டெலிபோனில் பேசி முடித்துவிட்டு அவர் மாடிப்படிகளில் தடதடவென்று இறங்கி வரும்போது அந்தக் கட்டடமே கிடுகிடுக்கும்.

அப்புறம் ஒரு மணி நேரம் வரை அந்தப் பங்களாவில் ஒரு வித பயங்கர அமைதி நிலவும்.

எஜமானுடைய கோபம் அடங்கி அவர் சாந்தமாகப் பேசத் தொடங்கியதும், கடும் வெயில் வீசிய வான வெளியில் குளிர் நிலவு வீசத் தொடங்கியதுபோல் சூழ்நிலையோ அடியோடு மாறிவிடும். ஒரு சமயம் எரிமலையாகக் காட்சி அளிக்கும் துரைசாமி, ஒரு சமயம் பச்சை வாழைப்பட்டையாக மாறி விடுவார்.

அவருக்குக் 'குஷி' பிறந்துவிட்டாலோ சொல்லவேண்டியதில்லை. 'எல்லோரும் இன்று இராத்திரி மொட்டை மாடியில் உட்சார்ந்து தமாஷாக 'மூன்லைட் டின்னர்' சாப்பிடலாமா?" என்பார்.

"இன்றைக்கு அமாவாசை, நிலா இருக்காது" என்று யாராவது ஞாபகப்படுத்தினால், "அது எனக்குத் தெரியும்; மூன் இல்லாவிட்டால், மெர்க்குரி லைட்!" என்பார்.

அவரிடம் எதுவும் நிரந்தரம் கிடையாது. சிவன்போக்கு சித்தன் போக்கு என்பார்களே, அப்படித்தான்.

ஒரு சீசனில் சிகரெட்டைப் புகைத்துக்கொண்டிருப்பார். இன்னொரு சீசனில் சிகரெட்டைத் துறந்துவிட்டு வெற்றிலை சீவலாகப் போட்டுத் துப்பிக்கொண்டிருப்பார்.

வைத்தியத்திலும் ஒரேமாதிரி சிகிச்சை இருக்காது. இன்று அல்லோபதி, நாளை ஹோமியோபதி, மறு நாள் வாசஸ்பதி! அதற்கு அடுத்த நாள் சீதாபதி! பேசும் பாஷையும் அப்படித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/56&oldid=1479363" இலிருந்து மீள்விக்கப்பட்டது