பக்கம்:கேரக்டர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அவன் கோபம் தாங்காமல் தன் இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்துக் காண்பித்தான்.

"டேய், உன் கத்திக்குப் பயந்தவ இல்லேடா இந்த அம்மாக்கண்ணு. கயிதே! கஸ்மாலம்! காசைக் கீயே வெச்சுட்டுப் போவப் போறயா, இல்லாட்டி உன் தலையிலே நெருப்பை அள்ளிப் போடட்டுமா, அடத் தூ!" என்று வெற்றிலைச் சாற்றை அவன் மீது துப்பினாள்.

இதற்குள் அந்த ரிக்ஷாவைச் சுற்றிலும் பெரிய கூட்டம் கூடிவிடவே, வண்டிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. உடனே, போலீசார் வந்து அம்மாக்கண்ணுவைச் சமாதானப்படுத்தி ரிக்‌ஷாக்காரனிடமிருந்த பணத்தை வாங்கி அவளிடம் கொடுத்தனர். அப்புறம்தான் ரிக்‌ஷாவைப் போகவிட்டாள் அவள்.

கூவம் நதி வாராவதிக்கருகில் ஒரு கட்டைத்தொட்டி, அந்தக் கட்டைத் தொட்டிக்குப் பக்கத்திலுள்ள மரத்தின் கீழேதான் அவள் ஆப்பக்கடை போட்டிருந்தாள். எதிரில் ஒரு மலையாளத்தார் டீக்கடை. அதற்குப் பக்கத்தில் 'வாடகை ரிக்‌ஷாக்கள் நிற்குமிடம்' என்று ஒரு போர்டு. அந்தப் போர்டின் கீழ் நாலைந்து எருமை மாடுகள் படுத்துக் கொண்டிருக்கும்.

பொழுது விடிந்தால், அந்தப் பேட்டையிலுள்ள போலீஸ்காரர்கள், கைவண்டிக்காரர்கள், ஏழைகள், பிச்சைக்காரர்கள் எல்லோரும் 'நாஷ்டா'வுக்கு அம்மாக்கண்ணுவின் கடையைத்தான் நாடி வருவார்கள்.

புகையப் புகைய அவள் சுட்டுப் போடும் ஆப்பங்களைச் சாப்பிட்டுவிட்டுச் சிலபேர் காசு கொடுப்பார்கள். சில பேர் கடன் சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால், அம்மாக் கண்ணுவை ஒருவரும் ஏமாற்ற முடியாது. நாஷ்டா பண்ணுகிற வேளையில் ஊர் அக்கப்போரெல்லாம் அங்கே பேசப்படும். அம்மாக்கண்ணுவும் அவ்வப்போது வெற்றிலைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/72&oldid=1479471" இலிருந்து மீள்விக்கப்பட்டது