பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177


கொங்கு நாட்டுப் புலவர்கள்

புலவர் நிலை

சங்க காலத்துக் கொங்கு நாட்டின் கல்வி நிலை ஏனைய தமிழ் நாட்டிலிருந்தது போலவே இருந்தது. புலவர்களுக்கு உயர்வும் மதிப்பும் மரியாதையும் இருந்தன. புலவர்கள் ஒரே ஊரில் தங்கிக் கிணற்றுத் தவளைகளைப் போலிராமல், பல ஊர்களிலும் பல நாடுகளிலும் சென்று மக்களிடம் பழகி நாட்டின் நிலை சமுதாயத்தின் நிலைகளை நன்கறிந்திருந்தார்கள். மக்களிடையே கல்வி பரவாமலிருந்தாலும், கற்றவருக்குச் சென்றவிடமெல்லாம் சிறட்பு இருந்தபடியால், வசதியும் வாய்ப்பும் உள்ளவர் முயன்று கல்வி கற்றனர். ஆண்பாலார், பெண்பாலார், அரசர், வாணிகர், தொழிலாளர் முதலியவர்கள் அக்காலத்தில் புலவர்களாக இருந்தார்கள், அந்தப் பழங் காலத்திலே இருந்த அந்தப் புலவர்கள் இரண்டு பொருள்களைப் பற்றிச் சிறப்பாகச் செய்யுள் இயற்றினார்கள். அவற்றில் ஒன்று அகப்பொருள், மற்றொன்று புறப்பொருள். அகப் பொருள் என்பது காதல் வாழ்க்கையைப் பற்றியது. புறப் பொருள் என்பது பெரும்பாலும் வீரத்தையும் போர்ச் செயலையும் பற்றியது. சங்க இலக்கியங்களில் சிறப்பாக இவ்விரு பொருள் பேசப்படுகின்றன. பலவகையான சுவைகள் இச்செய்யுட்களில் காணப்படுகிறபடியால், இவற்றைப் படிக்கும்போது இக்காலத்திலும் மகிழ்ச்சியளிக்கின்றன. மேலும்