உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோயில் மணி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

கோயில் மணி

அவர் மூலமாகவே மாட்டை அந்த ஆளிடம் அனுப்பினேன். மாதம் இருபது ரூபாய் செலவாயிற்று. மறுபடியும் பழைய பால்காரரிடம் பால் வாங்க வேண்டி வந்தது. அவர் இப்போது ஒரு வகையான உபதேசம் செய்ய ஆரம்பித்தார். “மாடு வாங்கி வளர்ப்பதென்றால் எளிய காரியமா? இந்தத் தொழில் எல்லாம் உங்களுக்குச் சரிப்பட்டு வராது. நீங்கள் ஆள்காரன், தீனி, கொட்டகை என்று செலவு பண்ணினீர்களே! அதற்குப் பதில் ஒரு மாட்டின் விலையை என்னிடம் கொடுத்திருந்தால் உங்கள் பேரால் ஒரு மாட்டை வாங்கிக் கட்டியிருப்பேன். முதல் வேலையாக உங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து, நீங்களே கறந்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பேன். அது மட்டுமா? மாட்டு விலையை அந்தப் பால் விலையில் கழித்துக் கொள்வேன். என்னிடம் யோசனை கேட்காமல் இப்போது தொல்லைப் படுகிறீர்களே!” என்றார்,

அவர் சொன்னது என் மனைவிக்கு நியாயமாகப் பட்டது. அவள் என்னிடம் ஏதோ யோசனையைச் சொன்னாள். “பார்க்கலாம்” என்றேன்.

எங்கள் மாடு புதுக்கன்றுக் குட்டியுடன் வந்து சேர்ந்தது. ஆனால் அது இளைத்துத் துரும்பாக இருந்தது. இருபது ருபாயில் அது யானையாகவா மாறும் என்று சமாதானம் செய்து கொண்டோம். மறுபடியும் எங்கள் வீட்டுப் பாலைச் சாப்பிட்டோம். பழைய அளவு அது கறக்கவில்லை.

நடுவிலே அதற்கு வியாதி வேறு வந்து விட்டது. அதற்கு யாரோ வந்து வைத்தியம் செய்தார்கள். அதற்கும் செலவு செய்தேன்.

வீட்டுப் புறக்கடைப் பக்கம் போகச் சகிக்கவில்லை. ஒரே சாணி நாற்றம். ஆள்காரன் மக்கர் பண்ணினான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/40&oldid=1382801" இலிருந்து மீள்விக்கப்பட்டது