பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

க. அயோத்திதாஸப் பண்டிதர்


யென்றும் அதன் குழலுக்கு பிரம்மரந்ரமென்றும் எழுதி வைத்திருக்கின்றார்கள். குண்டலியென்னும் பெயர் வாய்த்தக் காரணம் யாதென் பீரேல், குழவி கருப்பையிலடங்கியிருக்குங்கால் உள்மார்பிற்கும், முதுகிற்கும் ஓடிக்கொண்டிருந்த மூச்சானது கருப்பையை விட்டுக் குழவி வெளிவந்து விழுந்தவுடன் வாய் திறந்து கா - கூவென்று கூச்சலிடுங்கால் நாசியுந் திறந்து உள்ளுக்குள் ஒடிக்கொண்டிருந்த மூச்சு உள்ளுக்கும் வெளிக்கும் ஒடும்படி யாரம்பித்துக்கொள்ளுகின்றது. அவ்வாரம் பத்தால் முன்பு உள்ளுக்கோடும் வழி கொடுத்திருந்த நாடியானது குளிர்ச்சி யால் மண்டலமிட்டு சுருண்ட பாம்பு போல் உந்தியினிடமாக வளைந்து அவ்வழியையடைத்து விடுகின்றது. கருப்பையில் நீண்டோடிக்கொண்டிருந்த நாடி குழவி வெளிவந்து விழுந்த வுடன் சுருண்டு அவ்வழி யடைத்தபடியால் அதற்கு குண்டலி நாடியென்று பெயரிட்டார்கள் முன்னோர்.

அக்குழலுக்கு பிரம்மரந்திரமென்னும் பெயர் வந்த காரணம் யாதென்பீரேல், அக்குழலின் வழியே மூச்சை மறுபடி யும் திருப்பிக் கொண்டவனுக்கு, மாளாப்பிறவி உள்ளுக்குந் துக்கமற்று நிருவாண சுகமுண்டாகிறபடியால் அதின் நற்செயலுக்காய் அக்குழலுக்கு பிரம்மரந்திரமென்னும் பெயரை யளித்துள்ளார்கள் முன்னோர்.

அப்பிரம்மரந்திரக் குழலுள்ள நாடி இடது மார்பிற்கும், வலது முதுகிற்கும் சுற்றி நிற்கின்றபடியால் அப்புலனைத் தெரிந்துக்கொள்ளும் உபநயனமாம் உள்விழி கண்ட சாதனனென்று உலகோரறிவதற்காக, மதாணி பூணு நூ லென்னும் முப்புரிநூலை இடது மார்பிற்கும் வலது முதுகிற்குமாக அணைத்துக் கொள்ளும்படிச் செய்து அவனை இல்லற வாசிகளுக்குக் காண்பித்து இந்நூல் அணைந்த வடையாளம் பெற்றவன் ஐம்புலனடக்குந் தென்புலத்தானா தலின் நீங்கள் யாவரும் அவனிடம் பகுத்தறிவு உதவி பெற்று கடைத்தேறுங்கள். உயர்ந்தோனால் உலகமுங்கடைத்தேறும் என்றார்கள். ஆதலின் மதாணிப் பூணூல் மார்பிலணைந்துள்ள ஒவ்வொரு ஞான சாதகர்கள் தங்கியிருக்கும் வியாரங்களுக்குச் சென்று இல்வாழ் மக்கள் வேண நல்லறிவு பெற்று வந்தார்கள்.