பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாந்தரப் பார்ப்பனர்களாகக் கருதிக்கொண்டனர். பார்ப்பனீய கொள்கைகளைக் கைவிடுவதற்கு மாறாக அதை உறுதியாகப் பிடித்துக்கொண்டனர். மேலும், பார்ப்பனர்கள் மீது இவர்களுக்கு இருந்த கோபமெல்லாம் பார்ப்பனர்கள் தங்களை இரண்டாம் நிலையில் வைத்துள்ளனர் என்பதுதான்" என்று அம்பேத்கர் கூறினார். அம்பேத்கர் கூறியது இன்று மேலும் பொருத்தமானதாயிருக்கிறது.

பிற்பட்ட சாதியினரின் நலன்களை மட்டுமே மையமாக வைத்து கட்டப்பட்ட பார்ப்பானிய எதிர்ப்பு இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சமரசத்தை நோக்கி சரிந்தது. அதனால்தான் அயோத்திதாஸப் பண்டிதரின் சிந்தனைகளை அது புறக்கணித்தது. ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே பண்டிதரின் பெயரும், சிந்தனைகளும், பங்களிப்பும் வரலாற்றிலிருந்து துடைக்கப்பட்டன. உள்ளீடற்ற பார்ப்பன எதிர்ப்பு தனது தர்க்க பூர்வமான முடிவுக்கு சென்றுவிட்ட இன்றைய சூழலில் இந்தியாவிலும், இலங்கையிலும் தாழ்த்தப்பட்ட மக்களை மையமாகக் கொண்ட பார்ப்பன எதிர்ப்பின் அவசியம் , உணரப்பட்டுள்ளது. தமிழ் அடையாளம் என்பதும் இந்த மக்களை மையமாகக் கொண்டே கட்டமைக்கப்பட வேண்டுமென்ற புரிதல் இப்போது வந்துள்ளது. இது அயோத்திதாஸப் பண்டிதரின் சிந்தனைகளுக்கான முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. தமிழன் என்ற பெயரில் பத்திரிகையை நடத்தி சுயமரியாதைமிக்க அடையாளத்தை உருவாக்கிய அயோத்திதாஸப்பண்டிதரின் சிந்தனைகள் தமிழரின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் இன்று படைக்கலன்களாகின்றன.

பார்ப்பனர்களின் மோசடிகளை வேறு எவரைவிடவும் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியவர் அயோத்திதாஸப் பண்டிதர். ஒரு அலுவலகத்தில் ஒரு பார்ப்பனர் வேலைக்கு சேர்ந்துவிட்டால் அவர் தனது உறவினர்களையெல்லாம் அங்கே கொண்டு வந்து சேர்த்து அதையொரு பார்ப்பனக் கூடாரமாக மாற்றிவிடுகிறார் எனப் பண்டிதர் குறிப்பிட்டார். "சுதேசமித்திரன்", "இந்தியா" ஆகிய பத்திரிகைகளின் செய்தி வெளியிடும் முறையிலிருந்த சாதிக் கண்ணோட்டத்தை அயோத்திதாஸப் பண்டிதர் அம்பலப்படுத்தியுள்ளார்.