பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயோத்திதாஸ்ப் பண்டிதர் (1845 – 1914) அண்ணல் அம்பேத்கர், பெளத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு காரணியாக இருந்தவரான அயோத்திதாஸப் பண்டிதர் கோவை மாவட்டத்தில் 1845 ஆம் ஆண்டுமே மாதம் இருபதாம் தேதி பிறந்தார். அவரது இயற்பெயர் காத்தவராயன். சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற பின்னர் தனது குருவான அயோத்திதாஸ் கவிராஜ பண்டிதரின் பெயரையே தனக்கும் சூட்டிக்கொண்டார். தமிழில் மிகுந்த புலமை கொண்டிருந்த பண்டிதர், பாலி, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். 1870 வாக்கில் நீலகிரியில் அத்வைதாந்த சபையை நிறுவினார். 1891-ல் திராவிட மகாஜன சபை அயோத்திதாஸ்ப் பண்டிதரால்தான் நிறுவப்பட்டது. சிந்தனையாளர்கள் மதிக்கும் மேதைமையோடு விளங்கிய பண்டிதர், ஒடுக்கப்பட்ட மக்களின் பால் பேரன்பு கொண்டவராயிருந்தார். அம்மக்களின் குழந்தைகளுக்கு கல்வி புகட்டப் பாடுபட்டார். சென்னையில் அந்தக் குழந்தைகளுக்காக இலவச பள்ளிக்கூடங்களை துவக்க உதவினார். 1907 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி 'ஒரு பைசா தமிழன்' என்ற வாரப் பத்திரிகையை அவர் துவக்கினார். அயோத்திதாஸ்ப் பண்டிதரால் உருவாக்கப்பட்ட சாக்கிய பெளத்தர்கள் சங்கம் தமிழ் சமுதாயத்தின் சமூக அரசியல் போக்கையே மாற்றியமைத்தது. தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், சித்த மருத்துவம் குறித்தும் அயராது எழுதிவந்த பண்டிதர் அரிய தமிழ் நூல்களை பதிப்பித்தும்: தமிழ் இலக்கியங்களுக்கு குறிப்பாக வள்ளுவர், ஒளவையார் ஆகியோர் படைப்புகளுக்கு பெளத்த மார்க்கத்தின் கோணத்திலிருந்து புதிய விளக்கங்களை எழுதியும் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கினார். தமிழில் அதுவரையிலும் புறக்கணிக்கப்பட்டிருந்த படைப்புகள் பல அவரால் புது விளக்கமும், கவனிப்பும் பெற்றன. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய அயோத்திதாஸ்ப் பண்டிதர் கல்வியாளராக, சமூக, மத சீர்திருத்தவாதியாக, அரசியல் சிந்தனையாளராக, மருத்துவராக, படைப்பாளியாக, பத்திரிகை ஆசிரியராக பல தளங்களில் பங்களிப்பு செய்தவர். தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் சிந்தனையில், நடைமுறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் இவர். தலித் சாகித்ய அகாடமி