பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

சங்ககாலத் தமிழ் மக்கள்

யார் 'கணி', என வழங்கப்படுவர். பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து, அங்கே நிகழும் வானவில், மின்னல், ஊர்கோள் (பரிவேடம்), தாமம், மீன் வீழ்வல், கோள் நிலை, மழை நிலை முதலியவற்றைக் கண்ணி (கருதி)ப் பயன் கூறுவார் கணி என வழங்கப் படுவர். கணியன் பூங்குன்றனார் என்னும் புலவர் சோதிடத்தில் வல்லவர் என்பது அவர் 'கணியன்' என வழங்கப்படுதலால் விளங்கும். சங்கச் செய்யுட்களில் வான நூலைப்பற்றிய பல குறிப்புக்கள் காணப்படுகின்றன. அக் குறிப்புக்களைத் தொடர்ந்து ஆராய்ந்தால், வான நூல்பற்றிய புதிய உண்மைகள் பல வெளிப்படுதல் கூடும்.

தமிழ் மக்கள் கிலத்தின் தட்ப வெப்ப இயல்பினை நன்குண்ர்ந்து, அந்நிலத்தினைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என இவ்வாறு வகுத்து, அவற்றிற்கேற்ற கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என அறுவகைப் பெரும்பொழுதுகளும்; மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு என அறுவகைச் சிறு பொழுதுகளும் வகுத்துரைத்தலால், நிலநூல்பற்றிய கல்வி அக்காலத் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தப் பெற்றமை புலனாம். நிலங்களுக்கேற்றவாறு புல் மரம் முதலிய தாவரங்களும், பறவை விலங்கு முதலிய உயிர் வகைகளும் இன்னஇன்ன எனப்பிரித்து விளக்குதலால், தாவர நூலும் உயிர் நூலும் பற்றிய உண்மைகள் அக்காலத்துக் கற்பிக்கப்பட்டமை தெளியப்படும்.

நிலத்திற்கேற்ற உணவும் தொழிலும் வகுத்துரைத்தலால், நிலவியல்புக்கேற்ப மேற்கொள்ளும் பயிர்நூல் பயிற்றப்பட்டது என உய்த்துணரலாம். குறிஞ்சி முதலிய நிலங்களுக்குத் தக்கபடி அவ்வந்நிலங்களிலே வாழும் மக்க-