உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் கல்வி நிலை

119


தமிழ் மொழிக்கே உரியனவாகத் தமிழ் மக்கள் வகுத்துணர்த்தியவை இசையும் நாடகமும் ஆகும். இயற்கையில் எழுந்த இனிய ஓசையைப் பொருளுணர்த்தும் பாக்களோடு ஒன்றுபடுத்தி இசைத்துப் பாடுவது ‘இசை’ எனப்படும். மூலாதாரத்திற்றொடங்கிய எழுத்தின் ஒலி, நெஞ்சு, கண்டம், நாக்கு, மூக்கு, மேல்வாய், கீழ்வாய், உதடு, பல் என்னும் எட்டிடங்களிலும் பொருந்தி, எடுத்தல், படுத்தல், நலிதல், உறழ்வு, கம்பிதம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண் வகைப்பட்ட தொழில்களால் உருவாகப் பண்ணிக்கொள்ளப்படுதலாற் ‘பண்’ என்பதும் காரணப் பெயராம். நானிலத்தவராகிய நிலமாந்தர் எல்லாரும், தத்தம் நிலத்திற்குச் சிறப்புரிமையுடைய யாழ், பண், பறை முதலிய இசைக் கூறுபாடுகளை வளர்த்து வந்தனர். கிளி, குயில் முதலியவற்றின் இன்குரலினைக் கேட்டுணர்ந்த மக்கள், இயற்கையில் தோன்றும் அவ்வின்னோசைகளையொத்த ஒசைகளைத் தம்முள்ளிருந்து எழுப்பக் கற்றுக்கொண்டதுடன் படிப்படியாக மேன்மேல் உயர்ந்து செல்லும் அவ்வோசையினை ஏழு வகையாகப் பகுத்துக் கொண்டார்கள். ஆண் மக்களது கண்டத்தின் ஒசை காந்தார சுரத்தையொத்த தென்பர். அச்சுரத்தின் வழியோசையாக ‘உழை’ என்ற இசையும், அதன் வழியோசையாகக் ‘குரல்’ என்ற ஒசையும் அதன் வழியோசையாக ‘இளி’ என்ற ஒசையும், அதனையொட்டித் ‘துத்தம்’ என்ற ஒசையும், அதனையொட்டி ‘விளரி’ என்ற ஒசையும், அதன் வழியாகக் கைக்கிளை என்ற ஒசையும் கிளைமுறையாகப் பிறக்கும் என முதன்முதற் கண்டுணர்ந்த பெருமை தமிழ் மக்களுக்கே உரியதாகும்.

இவ்வேழிசைகளையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழ் மக்களால் வளர்க்கப் பெற்றதே இசைத்