பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

சங்ககாலத் தமிழ் மக்கள்

காக்கும் உழவர்களைப் 'பகடு புறந்தருநர்' எனப் புலவர் பெருமக்கள் பாராட்டிப் போற்றினார்கள். இங்கனம் தன்னலங் கருதாது பிறர்க்கு உதவி செய்தல் கருதி இடைவிடாது உழைக்கும் பண்பு இவ்வுழவர்களிடம் சிறப்பாகக் காணப்படுதல் பற்றி இவர்களை 'வேளாளர்' என்ற சொல்லாற் சான்றோர் வழங்கிப் போற்றினர் என்க (வேளாளர் - பிறர்க்கு உதவுபவர். வேளாண்மை - உபகாரம்.)

மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படுவனவற்றுள் உடையும் ஒன்றாகும். 'நாணுடைமை மாந்தர்சிறப்பு' என்றார் வள்ளுவர். விலங்குகளைப்போலத் திரியாமல், அற்றம் மறைத்தற்குரிய உடையினையுடுத்து மானத்துடன் வாழும் முறை மக்கள் வாழ்க்கையின் சிறப்பியல்பாகும். நாகரிகம் வளராத மிகப் பழங்காலத்தே தழையினையும், மான், புலி முதலியவற்றின் தோலினையும் உடுத்து வாழ்ந்த மக்கள், தங்களுடைய நுண்ணறிவின் திறத்தால் பருத்தியின் பஞ்சினை நூலாக நூற்று ஆடை நெய்து உடுத்துக் கொண்ட செயல், நாகரிகத்தின் தனிச்சிறப்பாகும். பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் மக்கள் இந்நெசவுத் தொழிலினைக் கண்டுணர்த்து, இத்தொழிலில் நுண்ணிய தேர்ச்சி பெற்று விளங்கினார்கள் என்பது, பழைய தமிழ் நூல்களால் நன்கு துணியப்படும். மகளிர் பருத்திப் பஞ்சினைக் கடைந்து செப்பஞ் செய்து நுண்ணிய நூலாக நூற்குந் தொழிலிற் கைத்திறம் பெற்று விளங்கினார்கள். அவர்கள் நூற்று இழைத்துத் தந்த நூலைப் பாவாக விரித்துத் தறியில் நெய்து ஆடையாகக் கொடுக்கும் கடமை ஆடவர் தொழிலாய் அமைந்தது. பருத்தி நூலாலும், பட்டு நூலாலும், எலி மயிராலும் நுண்ணிய ஆடை நெய்பவர்கள் தமிழ் நாட்டுப் பேரூர்களில் ஆங்காங்கே