உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

சங்ககாலத் தமிழ் மக்கள்

தைக் குமண வள்ளலிடம் எடுத்துரைக்கும் முறை, படிப்பார் உள்ளத்தை உருக்குவதாகும்.

பெருஞ்சித்திரனார் இங்ஙனம் வறுமையாற் பெரிதும் வருத்தமுற்றவராயினும், தாம் குமணன் பாற்பெற்ற பரிசிற் பொருளைத் தமக்கென இறுக வைத்துக்கொள்ளாது, தம் போல வறுமையால் வருந்துவார் யாவராயினும் அவரெல்லார்க்கும் வரையாது வழங்குமாறு தம் மனைவிக்கு அறிவுறுத்துகின்றார்[1]. இச்செயலால் அக்காலத் தமிழ்ப் புலவர்களின் வள்ளண்மை இனிது புலனாதல் காணலாம்.

எத்துணைத் துன்பமுற்றாலும் தங்களது பெருந்தன்மைக்குப் பொருந்தாத நிலையில் செல்வர்பாற் பணிந் தொழுகுதலைப் புலவர்கள் ஒரு சிறிதும் விரும்பமாட்டார்கள். தமக்குப் பிறர் தரும் பொருள் அளவாற்பெரிதாயினும், அன்பின்றியும் காலந்தாழ்த்தும் வரிசையறியாதும் வழங்கப்பெற்றால், அதனை வெறுத்து விலக்குதலும்; தினையளவிற்றாய சிறுபொருளாயினும், தம் புலமைத் திறமுணர்ந்து வரிசையறிந்து கொடுக்கப்பெற்றால் அப் பொருளை ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்ளுதலும் பெரும் புலவர்களின் இயல்பாகும். அரசர் முதல் வறியவர் வரை எல்லா மக்களையும் ஒப்ப மதித்து, அவர்தம் நல்லியல்புகளை எடுத்துரைத்துப் பாராட்டுதலும், தீமை கண்டால் இடித்துரைத்துத் திருத்துதலும், மக்கள் நலம் பேணும் தறுகண் வீரர்களையும் தமிழ் வள்ளல்களையும் உளமுவந்து பாராட்டி ஊக்குதலும், மனை வாழ்க்கையிலும் உலகியலிலும் மக்கள் பாற் காணப்பெறும் தவறுகளை அவ்வப்போது எடுத்துக்காட்டி அவர்களைத் திருந்திய வாழ்க்கையில் வாழச் செய்தலும் பண்டைத் தமிழ்ப் புலவர்களின் செயல்களாய் அமைந்தன.


  1. 1. புறம் 163.