பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



III
ஆடவர் நிலை

எத்தகைய செயலையும் தலைமை தாங்கிச் செய்து முடிக்கும் இயல்பு ஆண்மைத் தன்மையாகும். இவ்வியல்பு ஆடவர் பெண்டிர் இருபாலாருள் ஆடவருக்கே சிறப்பாக உரியதாம். தொடங்கிய வினைகளை இடையே நெகிழவிடாது செய்து முடிக்கும் வினையாண்மையுடையார் ஆடவர் என வழங்கப் பெற்றனர். வினைத்திறத்தில் வெற்றி பெற்று விளங்குதல் ஆண்மைத் தன்மையை மேலும் மேலும் வளர்ப்பதாகும். வாழ்க்கையில் நேரும் இடையூறுகளை எதிர்த்து நின்று வெற்றி காணுதலே ஆடவர்களின் குறிக்கோளாக அமைதல் வேண்டும்.

வலிய தொழில்களைச் செய்தற்கேற்ற உடலமைப்பும் உள்ளத்திண்மையும் பெற்றவர் ஆடவராவர். அவர்களாற் செய்தற்குரிய கடிய தொழில்களை மெல்லியலாராகிய பெண்டிர் செய்தற்குரியரல்லர். தீங்குதரும் உயிர்களை நோக்கி அஞ்சாமை ஆடவர் இயல்பு; அஞ்சியொதுங்குதல் பெண்மையின் இயல்பாகும். அஞ்சும் இயல்புடைய பெண்ணினத்தை அச்சமின்றிக் காத்தற்கு உதவுவது ஆண்மையின் ஆற்றலேயாகும். இவ்வாற்றலால் மனை வாழ்க்கைக்குரிய மகளிரை ஆதரித்து, அவர்கள் அச்சமின்றி வாழத் துணைசெய்தல் ஆடவர்களின் கடமையாகக் கருதப்பெற்றது.

பெருமையும் உரனும் ஆடவர்களின் பண்புகளாம். ஒருவன் தன் வாழ்க்கையில் எல்லாரைக்காட்டிலும் தன்னை உயர்நிலையில் நிறுத்தல் பெருமையாகும். கல்விப் பயிற்சியினால் உண்டாகும் நல்லறிவினாலும், எத்தகைய