பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

சங்ககாலத் தமிழ் மக்கள்


உரியதாகும். துன்பத்தால் தளர்ந்து சாயுங் தங்கள் குடியினைத்தளராமல் தாங்கிநிற்கும் ஆண்மக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்றியமையாதவர்களாகக் கருதப்பட்டார்கள்.

இளைஞர்களைப் போர்த் துறையில் பழக்கும் பயிற்சிக் கூடங்கள் தமிழ் நாட்டிற் சிற்றூர்தோறும் நிறுவப்பெற்றிருந்தன. ஊரிலுள்ள இளைஞர்களையெல்லாம் ஒன்று சேர்த்துப் போரிற் பழக்கும் அப்பயிற்சிக் கூடங்கள் 'போரவை' எனவும், 'முரண் களரி' எனவும் வழங்கப் பெற்றன. போரவையிற் பயிற்சி பெற்ற வீரர்களின் திறமையினை உணர்தல்கருதி ஆண்டுதோறும் ஊர்மக்கள் போர்விழா நடத்தி வந்தார்கள். அவ்விழாவிற் கலந்து கொண்ட இளைஞர்கள் விற்போரிலும் மற்போரிலும் தாங்கள் பெற்ற திறமையினைப் போர் விளையாட்டிற் புலப்படுத்தினர்கள். இங்ஙனம் கொண்டாடப்படும் போர்விழா, 'பூந்தொடை விழா' என வழங்கப் பெற்றது. இந்நாளிற் கல்லூரியிற்பயிலும் மாணவர்களுக்குப் போர்ப்பயிற்சி தருதல் இன்றியமையாதது என அரசியலறிஞர்கள் பல முறையிலும் வற்புறுத்திப் பேசக் கேட்கின்றோம். இப்பயிற்சியின் இன்றியமையாமையை முன்னரே உணர்ந்த தமிழ்மக்கள், இளைஞர்கள் கல்வி பயிலும் பொழுது அவர்களுக்குப் பருவமறிந்து போர்த்தொழிலையும் கற்பித்தற்குரிய வாய்ப்பினை அளித்தார்கள்.

சோழர்குடித் தோன்றலாகிய பெருநற்கிள்ளி என்பான், தன்னாட்டிலுள்ள இளைஞர்களுக்குப் போர்ப் பயிற்சி தருதல் கருதிப் போரவையினை நிறுவி, அவ்வவையில் இளைஞர்களைக் கூட்டிப் போர்த்துறையிற் பழக்கினான். போரவைக்குத் தலைவனாய் விளங்கியது கருதிப் 'போரவைக்