உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆடவர் நிலை

81

னிருந்து வாழ்வதன் நோக்கம், விருந்தினர்க்களித்து, வறுமையாளர் எல்லார்க்கும் நல்லாற்றின் நின்ற துணையாய் உதவி செய்தலே என்பது அவர்தம் கொள்கையாய் அமைந்தது. ஆண்மையுடையார் வீடுகள், இரவலர்க்கும் பிறர்க்கும் அடையா வாயிலையுடையனவாய் விளங்கின.மனைவியுடன் வாழ்க்கை நடத்துங்கால் ஆடவர் தம் நாட்டிற்கு வரும் இடையூறுகளை நீக்குதல் கருதி, அரசனுக்குத் துணையாய்ப் போர் செய்யப் பிரிந்து செல்லுதல் உண்டு.

‘போர்க்களத்திலே வீரத்திற்குத் தானே எல்லையாய் விளங்கும் வீரனொருவன், மனைக்கு விளக்கந்தரும் தன் மனைவியொடு கூடி வாழ்ந்து, நாட்டுக் குடிகளுள் ஒருவனாய் விளங்குகின்றான். அவனே பகைவர் தன் நாட்டிற் படையொடு புகுத்து தீங்கு செய்தவிடத்து, அவர்தம் சேனை வெள்ளத்தைத் தடுக்கும் அணையாகவும் விளங்குகின்றான்’, எனப் புலவர் ஒருவர் தமிழ்நாட்டு ஆடவரது இயல்பினைப் புறப்பாடல் ஒன்றில் 3814) எடுத்துரைக்கின்றார். இதனால், தமிழ் நாட்டிலுள்ள ஆடவர்கள் இந்நாட்டின் குடி மக்களாய் விளங்கியதுடன், சமயம் நேர்ந்தபொழுது போர் செய்து நாட்டினைக் காக்க வல்ல படை வீரர்களாகவும் தொண்டு செய்தார்கள் என்பது நன்கு தெளியப்படும்.

ஆண் மக்கள் தாங்கள் வாழும் நிலப் பகுதியை எல்லாப் பொருள்களும் விளைவதற்குரிய நிலையில் உழவு முதலிய தொழில்களைச் செய்து வளமுடையதாக்கினார்கள். அவர்களுடைய இடைவிடாத உழைப்பினால் நீரில்லாத பாலையும் வளமுடையதாய் மாறிற்று. எல்லா வளங்களும் ஒருங்கு அமைந்த நாடாயினும், அந் நிலத்தில் வாழும்

 

6