பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஔவையார்

53

ராகிய தமிழ் மூவேந்தர்களும், வேறு பல குறு நில மன்னர்களும் ஆண்டு வந்தனர்; அரசர், காவல்செறிந்த அரண்கள் பல அமைத்து ஆண்டு வந்தனர்; அத்தகைய அரண்களுள், தகடூர், பறம்பு என்ற இரு அரண்களை அறிந்திருந்தார் ஒளவையார்; ஒருநாட்டு அரசன், பிற அரசர்களிடம் திறைவாங்கிக்கொண்டு, அவர்களை அவர்கள் நாட்டை ஆளவிடும் பேரரசுமுறையும் அன்றைய தமிழகத்தில் நிலவக் காண்கிறோம்; திறைகொடா அரசர்களை அழிப்பதோடு, அவர்கள் நாட்டையும் அழித்துக் காடாக்கும் காட்டுமிராண்டி முறையும் அங்கே கையாளப்பட்டுள்ளது. அரசர், தம் போர்முரசினை ஊர்ப் பொதுவிடத்தேயுள்ள மன்றங்களில் உயரக் கட்டித் தொங்கவிட்டு வைப்பர்; படைக்கலங்களைப் போரற்ற காலங்களில், கொல்லனிடத்துக் கொடுத்துப் பழுதுபார்த்து, நீடித்து உழைக்க நெய்பூசி, நல்ல காவலமைந்தஇடத்தே, அணியாக நிறுத்திப் பீலியும், மாலையும் சூட்டிவைப்பர் பெய்யும் மழை நீரைத் தான் ஏற்றுக்கொண்டு தன்னப்பிடித்து வருவார்மேல் படாமல் காக்கும் குடைகளைப்போன்று, பகைவர் அம்பும், வேலும் தம் அரசர் மீது படாமல் தங்கள் மெய்யில் ஏற்றுக்கொண்டு தம் அரசர்களைக் காக்கும் உண்மைவீரம் செறிந்த மறவர்களை அரசர்கள் தம் மெய்காப்பாளராகக் கொண்டு வாழ்ந்தனர்.

ஒளவையார் கண்ட தமிழகத்தில், "மலையோ!' என்று கண்டார் கண்களை மருளவைக்கும் மாடம் பல அமைந்த மாளிகைகளைக் கட்டி மகிழ்ந்து வாழ்ந்தனர்; அக்காலத் தமிழ்மக்கள், நுண்நூற் கலிங்கம் உடுத்து, பொற்கோல் அவிர்தொடி அணிந்து, நரந்தம் நாறி நெய் விரவு கறி சோற்றைப் பொன்னாலும் வெள்ளியாலும் ஆன கலங்களில் பெய்து உண்டு, மணிகள் ஒலிக்க விரைந்து ஒடும் குதிரைகள் பல பூண்ட தேர் ஏறிச்சென்று விழாக்கண்டு மகிழ்வர்: விழாக்காலத்தே மகளிர் தங்களை, இலை ஆடைகளாலும், வேறுபிற அணிகளாலும், மலர்களாலும், அழகுமிக அணிசெய்து கொள்வதும் உண்டு; விழாக்