பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



695

கவரி போன்று வண்டுகள் உண்ணும் பொருட்டு விரியும்; முத்தின் அன்ன வெள்ளிய மலர்கள், ஆலக்கட்டி விழுவது போல உதிரும்; பூவொடு வளர்ந்த இதன் பிஞ்சு சுவையுள்ள நீரைக் கொண்டது. ‘அத்தீஞ்சுவையுள்ள நீரைக் காட்டிலும், தனது காதலியின் வாய் எயிற்றில் ஊறிய நீர் அமுதம் போன்றதென்று செலவழுங்கிய தலைவன் சொல்கிறான்’ என்கிறார்:

“தொடையமை பன்மலர்த்தோடு பொதிந்து யாத்த
 குடையோரன்ன கோள்அமை எருத்தின்
 பாளைபற்று அழிந்து ஒழிய புறம்சேர்பு
 வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய
 நாள்உறத் தோன்றிய நயவருவனப் பின்
 ஆரத்து அன்ன அணிகிளர் புதுப்பூ
 வார்உறு கவரியின் வண்டுண விரிய
 முத்தின் அன்ன வெள்வீ தாஅய்
 அலகின் அன்ன அரிநிறத்து ஆலி
 நகைநனி வளர்க்கும் சிறப்பின் தகைமிகப்
 பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்
 நீரினும் இனியவாகி கூர் எயிற்று
 அமிழ்தம் ஊறும் செவ்வாய்
 ஒண்தொடி குறுமகள் கொண்டனம் செலினே”
-அகநா. 335 : 13-26

இதன் முற்றிய காய்தான் அடைகாய் எனவும், பாக்கு எனவும் கூறப்படும். இதனை வெற்றிலை, சுண்ணாம்பு முதலிய பிற வாசனைப் பொருள்களுடன் தாம்பூலம் கொள்வர்.

கமுகு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசினே (Calycinae)
தாவரக் குடும்பம் : பாமே (Palmae)
தாவரப் பேரினப் பெயர் : அரீகா (Areca)
தாவரச் சிற்றினப் பெயர் : காட்சூ (catechu)