பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

தருப்பை
சக்காரம் ஸ்பான்டேனியம்
(Sachaarum spontaneum, Linn.)

‘தருப்பை’ என்பது ஒரு வகையான நீளமான புல் ஆகும். இதனைக் கொண்டு கூரை வேயப்படும் என்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பாணாற்றுப் படையில்.

சங்க இலக்கியப் பெயர் : தருப்பை
உலக வழக்குப் பெயர் : தர்ப்பை, குசப்புல், தருப்பை, நாணல்
தாவரப் பெயர் : சக்காரம் ஸ்பான்டேனியம்
(Sachaarum spontaneum, Linn.)

தருப்பை இலக்கியம்

‘தருப்பை’ என்பது ஒரு வகைப் புல்; புதர்ச் செடியாகத் தரையடி மட்டத் தண்டிலிருந்து செழித்து வளரும்.

“வேழம் நிரைத்து வெண்கோடு விரைஇ
 தாழை முடித்து தருப்பை வேய்ந்த
 குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றில்””
-பெரும்பா. 263-265


என்ற அடிகளில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ‘தருப்பைப்’ புல்லைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வடிகளுக்கு நச்சினார்க்கினியர் பின்வருமாறு உரை கண்டார்:

‘வஞ்சி மரமும் காஞ்சி மரமுமாகிய வெள்ளிய கொம்புகளைக் கைகளுக்கு நடுவே கலந்து நாற்றி, வேழக்கோலை வரிச்சாக நிரைத்துத் தாழை நாரால் கட்டித் தருப்பைப் புல்லாலே வேயப்பட்ட குறிய இறப்பையுடைய குடிவினையும்’ என்பதால் கூரை வேய்தற்குத் தருப்பைப் புல் பயன்படுத்தப்பட்டது என்பதும் இவற்றை வேழக் கோலாலே வரிச்சை நிரைத்துத் தாழையின் நாரினால் கட்டுவர் என்பதும் அறியப்படும்.