பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

மட்டும் அமையாமல், பாரியையும் உடன் புகழ்ந்ததாக அமைந்துள்ளது. மேலும், அவர் அப் பறம்பைக் கண்டு அதன் இயற்கை வளத்தை எண்ணி அதனையும் எடுத்து இயம்பி வருந்திப் பாடினார் அஃதாவது, பாரியின் மலையில் ஒரு பக்கம் அருவி ஆரவாரஞ்செய்து ஒழுகிக்கொண்டிருக்கும் எனவும், பாணர்கட்கு வார்க்க வேண்டி மலையில் உள்ள தேன் கூடு உடைந்து தேனைச் சொரிந்து கற்களை உருட்டிக் கொண்டுவரும் என்றும் கூறினார்.

பாரி தான் உயிருடன் இருந்த காலத்துத் தன்னாட்டைச் செங்கோல் தவறாது ஆண்டுவந்திருக்கிறான். அதனால்தான், இவன் நாட்டில் உற்பாதங்கள் நிகழ்வது இல்லை. சனி என்னும் நட்சத்திரம் எரிந்து புகைதலும், தன் பகைராசிகளான இடபம், சிங்கம், மீனம் இவற்றோடு சேர்தலும், எல்லாத் திசையினும் புகைதோன்றுதலும், வெள்ளி தென் திசையில் சென்று முளைத்தலும், உற்பாத நிகழ்ச்சிகள். இத்தகைய உற்பாதங்கள் ஒருவேளை பாரியின் பறம்பு நாட்டில் தோன்றினாலும், இவன் நாட்டில் விளைவு குறைதல் கிடையாது. மலர் மரங்கள் பூத்தலில் குறைவு படுதல் இல்லை. இதனால், பாரி அறத்தாற்றில் அரசு புரிந்தான் என்பது தெரிகிறது.

இத்தகைய பறம்பு, பாரி இறந்தபின் பயன் அற்றுப் பொலிவற்றுப்போயது என்பது கபிலர் கருத்து, சிறிய குளம் பாதுகாப்பார் இன்றி, உடைவதுபோலப் பாரியின் பறம்புநாடும் பாதுகாப்பார் இன்றிப் போயது என்று கூறி வருந்தினர்.