பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

இவனை “வெறுக்கை நன்குடையன்,” என நவின்றார். கைம்மாறு வேண்டாக் கடப்பாடுடையவனாய் விளங்கினான் ஆதலால் இவன், “மாரிவண்கை ஓரி” என்றே உரைக்கப்படுபவனானாதலால், இத்தகைய ஈரநெஞ்சினனிடத்தில் பரணர் தம் உறவினர்களை அனுப்பினார். அவர்களும் சென்றனர்; ஓரியைக் கண்டனர். ஓரியைக் காண்டல்வரை தானே தடைகள்? கண்டால், இவன் தன்னைக் கண்டவர்களை வெறுங்கையினராய் அனுப்புதல் இல்லையே. ஆகவே, பரணரது உறவினர்கட்கு நல்ல விலையுயர்ந்த மணிகளால் ஆன குவளை மலர்களை இவன் ஈந்தனன்; அம்மலர்களை இணைத்து, மாலையாக அணிய வெள்ளியால் ஆன நாரினை ஈந்தனன்; பொன்னரி மாலைகளையும் உதவினன்; இவைகளே அன்றிப் பொன் பூண்களையும் கொடுத்தனன்; வேழம் ஈந்தும் அவர்களுக்கு வேட்கையை உண்டாக்கினன். இங்ஙனம் பரணர் சுற்றத்தார் தாம் எதிர்பாராவண்ணம் இத்துணையும் பெற்றதனால் தம்மையே மறந்தனர். அணிகலங்களை மட்டும் அணிந்து அனுப்பி இருப்பனோ? இனிமையான உணவையும் அளித்திருப்பான் அல்லனோ? ஆகவே, அவர்களை வயிறார உண்பித்தான். உணவுப் பெருக்காலும், அளவு கடந்த அணிகலன்களை அடைந்த காரணத்தாலும், முழவுகொட்டி முன்னே இருந்து ஆடுதலை மறந்தனர்; பாடுதலையும் மறந்தனர். இங்ஙனம் தம்மை அடைந்தவர்கள் தம்மை மறந்து, மயங்கும் வண்ணம் ஈந்து உவந்தவன் ஓரி.

ஓரியின் கொடைத் திறத்தை இம்முறையில் புகழ்ந்த பரணர் அவன் படைத் திறத்தையும் பாங்