பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


அக்கினி என்ற தேவர்களெல்லாம் குடியிருந்துகொண்டு குதூகலமாக ஆடிப் பாடிக்கொண்டு, ஆரணங்குகளாம். அரம்மை, ஊர்வசி ஆகியோர் புடைசூழ வீற்றிருக்கிறார்கள் என்பதெல்லாம், சுவைமிக்க கற்பனை என்பது தெரியலாயிற்று. கண்ணுக்குத் தெரியாதிருந்த அமெரிக்கா போன்ற நாடுகளைக் கண்டுபிடிக்கவும், கருத்துக்கு எட்டாதிருந்த கருவிகளை அமைக்கவும் முடிந்தது. பஞ்சாங்கத்துக்குப் பக்கத்திலே, அட்லாஸ் வந்து சேர்ந்தது வெற்றிச்சிறப்புடன்.

"உலக அறிஞர்கள் பரப்பிய அறிவொளியினால் பழமை மூடுபனி விலக ஆரம்பித்து விட்டது. நாட்டின் நிலையை மாற்றியமைக்கும் மாவீரர்கள், சமுதாயத்தின் நிலையைத் திருத்தும் தீரர்கள், அறிவுப் புரட்சியை நடத்திக் காட்டும் ஆற்றல் மிக்கோர் தோன்றலாயினர்" என்று எழுதிய எழுத்து பலப்பல நாடுகளிலே அழித்தெழுதப் பட்டது. அதனால் அல்ல; ஆற்றல்மிக்க வீரர்களால். பிறகு இங்கும் என்று தீருமோ விதிக்கு அடிமைத்தனம் என்ற விசாரமாவது எப்படித் தோன்றாம் லிருக்கலாம்;

விதிக்கு அடிமைப் பட்டிருக்கும் நிலை நிச்சயமாக நாம் எதிர்பார்த்ததைவிட, விரைவில் ஒழியத்தான் போகிறது--அசைவும் ஆட்டமும் கொடுத்துவிட்டது.

இப்போது மட்டும், இந்நாட்டு எழுத்தாளரும் பேச்சாளரும் இசைவாணரும் படப்பிடிப்பாளரும்--அறிவுத்துறைக்கு துரோகம் இழைக்காமல், மீண்டும் மீண்டும் விதிக்க அடிமையாகும் வேதனைக்கு எரு இடாமல், அதற்கு ஆதாரமாக உள்ள கற்பனைக் கதைகளைக் கருத்துக்கணைப் பரப்பாமல் --விதி பற்றிய எண்ணத்தை விடவேண்டிய அவசியத்தை, விதிக்கு அடிமைப்படாமல் இருந்தால் எவ்வளவு நலன் நாட்டுக்குக் கிடைக்குமென்பதை, விதியை நம்பி, ஏழை எப்படி ஏமாளியானான் என்பதை எத்தன் எப்படி வஞ்சிக்கிறான் என்பதை விளக்கத் தமது அறிவையும், திறமையையும் ஒரு பத்து வருஷ காலத்துக்குப் பயன்படுத்த முன்வந்தால்...நிச்சயமாக, உறுதியாகக் கூறலாம். விதிக்கு அடிமைத்தனம் ஒழிந்தே தீரும் என்று.