பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


தங்கள் நிலை மோசமாகிற நேரத்திலே தங்கள் உழைப்பின் விளைவாக ஏற்பட்ட வாழ்க்கை வசதிகளில் துளியும் தங்களுக்குக் கிடைக்காதது அவர்கள் மனதிலே ஓர் அணைக்க முடியாத தீயை உண்டாக்கிற்று. சேகரித்த தேனை இழந்துவிடும் வண்டுகளாகத் தமது வாழ்க்கை இருப்பதை அறிந்தனர். மனம் நொந்தனர். குறைகளைப்பற்றி ஒருவருக்கொருவர் பேசினர். ஒவ்வோர் நாளும் பேசினர். கூடி கூடிப் பேசினர்.

"என்னதான் இதற்குப் பரிகாரம்?
பொறுத்திருந்து பார்ப்போம்.
அவர் மனம் இளகாமலா போகும்?
ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும்;
அவர் நம்மைக் கைவிடமாட்டார்.

என்று துவக்கப்பட்ட உரையாடல், கொஞ்ச காலத்தில்

எத்தனை முறை கேட்பது?
எவ்வளவு கெஞ்சிக் கெஞ்சிக் கேட்பது?
ஏழைக்கு இரங்காதவனும் ஒரு மனிதனா?
அவன் மனம். கல்லா? இரும்பா?
கொஞ்சமாவது ஈவு இரக்கம் இருக்கிறதா?

என்று மாறி,

இப்போது முடியாதாம்!
இலாபம் இல்லையாம் முன்போல்.

என்ற பேச்சு மறுபடியும் மாறி,

நமது உழைப்பினால் கொழுத்தான்;
இலாபம் மலைபோலக் குவிந்திருக்கிறது;
நாம் வாடுகிறோம் வறுமையால்; அவன்
அரச போகத்தில் இருக்கிறான்;
நமது உழைப்புத் தரும் இலாபத்தால்தானே